Stalin was the DMK chief who spoke with Chief Minister Edapati for transport workers
தமிழக மக்களின் பிரச்சனையை தீர்க்க வேண்டும் எனவும் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும் எனவும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை வலியுறுத்தினார்.
போக்குவரத்து ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 19,500 வழங்க வேண்டும், ஓய்வூதியம், பணிக்கொடை உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும், வருங்கால வைப்புத்தொகையை உரிய கணக்கில் சேர்க்க வேண்டும், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த 7000 கோடி நிதியை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
13வது ஊதிய ஒப்பந்தத்தில் 2.57% ஊதிய உயர்வு கோரி போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 2.44% என்ற ஊதிய உயர்வு வழங்குவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்க போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சில மறுத்துவிட்டன. சில சங்கங்கள் ஒப்புக்கொண்டன. ஆனால், தொமுச, சிஐடியூ உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சங்கங்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னறிவிப்பின்றி திடீரென நடத்தப்பட்ட இந்த வேலைநிறுத்தத்தால் பொதுமக்களும் பயணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, உடனடியாக வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு உத்தரவிட்டது.
ஆனாலும், தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை வேலைநிறுத்தத்தை கைவிட முடியாது என்பதில் உறுதியாக இருக்கும் போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் மூன்றாவது நாளாக தொடர்ச்சியாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழக மக்களின் பிரச்சனையை தீர்க்க வேண்டும் எனவும் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும் எனவும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை வலியுறுத்தினார்.
