முரசொலி பவளவிழா சிறப்பாக நடைபெற்றதையடுத்து இன்று இரவு விமானம் மூலம் 8 நாள் பயணமாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் லண்டன் செல்கிறார். 

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது. இதனால் ஆட்சியை கலைக்க திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். 

ஆனால் இதுவரை எடப்பாடியின் ஆட்சிக்கு எந்த பங்கமும் வரவில்லை. இருந்தாலும் இரண்டு அணியாக இருந்த அதிமுக தற்போது 3 அணியாக பிரிந்துள்ளது. 

இந்நிலையில், சட்டமன்றக் கூட்டத்தொடர், ஏரி குளங்கள் தூர் வாருதல், கருணாநிதி பிறந்தநாள், சட்டமன்றத்தில் கருணாநிதி வைரவிழா, முரசொலி பவள விழா என்று கடந்த சில மாதங்களாக பரபரப்பாக இருந்த எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு லண்டன் செல்கிறார். 

சென்னை விமான நிலையத்தில் இருந்து இரவு 9.45 மணி விமானத்தில் அவர் புறப்படுகிறார். அவருடன் மருமகன் சபரீசன், ஸ்டாலின் குடும்ப நண்பர் கார்த்திக் ஆகியோர் உடன் செல்கிறார்கள். 

8 நாள் லண்டன் பயணத்தை முடித்துவிட்டு வரும் 20-ம் தேதி ஸ்டாலின் சென்னை திரும்புகிறார். லண்டனில் ஏதேனும் ரகசிய சந்திப்புக்கு திட்டமா என கட்சி வட்டாரங்களிடையே கேள்வி எழுந்துள்ளது.