திமுக பொதுச்செயலாளராக இருந்து வருபவர் பேராசிரியர் க.அன்பழகன். 98 வயதான அவர் தற்போது வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். திமுக மூத்த தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பிறகு அன்பழகன் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். வயது மூப்பு காரணமாக அவருக்கு அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்படுகிறது. இதற்காக மருத்துவ சிகிச்சைகள் அவருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அன்பழகனுக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அன்பழகன் உடனடியாக கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளித்தனர். திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல் அறிந்ததும் திமுக தலைவர் ஸ்டாலின், மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு அன்பழகனுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் ஆலோசித்தார்.

கர்நாடகாவில் கோர விபத்து..! தமிழக பக்தர்கள் 10 பேர் பலி..!

தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அன்பழகன் இருந்து வருகிறார். அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. அன்பழகனுக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் அதை குணப்படுத்துவதற்கான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன. அன்பழகனின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவனைத் தரப்பில் நேற்று கூறப்பட்டிருந்தது. இந்தநிலையில் இன்று காலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று அன்பழகனின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அவருடன் துரைமுருகன் உள்ளிட்ட திமுக முன்னணியினரும் சென்றிந்தனர்.