கஜா புயல் நிவாரணம் தொடர்பாக வைகோ கூறிய சில விஷயங்கள் தி.மு.க.வினரை அதிருப்தி அடைய வைத்த நிலையில் மு.க.ஸ்டாலினும் டென்சன் ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் புயல் நிவாரணப் பணிகள் குறித்து பேசினார். அமைச்சர்கள் உதயகுமார் மற்றும் விஜயபாஸ்கர் மிகச்சிறப்பாக புயல் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதாக வைகோ அப்போது கூறியிருந்தார். மேலும் மின்வாரிய ஊழியர்களின் பணியையும் வைகோ மிகுவும் பாராட்டி பேசியிருந்தார். வைகோவின் இந்த பாராட்டு அனைத்து ஊடகங்களிலும் முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பு செய்யப்பட்டது. 

தி.மு.க கூட்டணியில் உள்ள வைகோ அமைச்சர்களை பாராட்டியதை அ.தி.மு.க அரசு தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டது. அமைச்சர்களின் பணியை வைகோவே பாராட்டிவிட்டார் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டன. புயல் நிவாரணப் பணிகள் மந்தமாக உள்ளது, சுணக்கமாக உள்ளது என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் புகார்களை கூறி வந்தார். இது குறித்து கேள்வி கேட்ட போது அவரது கூட்டணியில் உள்ள வைகோவே அமைச்சர்களின் பணியை பாராட்டியுள்ளதாக பதில் அளிக்கப்பட்டது. 

வைகோ எதேச்சையாக இந்த கருத்தை கூற அது தி.மு.கவிற்கு தர்மசங்கடம் ஆகிவிட்டது. உடனடியாக வைகோவின் பேச்சு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவரும் வைகோ ஏன் திடீரென இரண்டு அமைச்சர்களை பாராட்டினார்? தற்போதைய சூழலில் புயல் நிவாரணப்பணிகளில் அப்பகுதி மக்களே திருப்தி அடையவில்லை, அப்படி இருக்கும் போது வைகோ ஏன் திடீரென இப்படி குட்டையை குழப்புகிறார் என்று ஸ்டாலினும் டென்சன் ஆகியுள்ளார். 

சில வாரப்பத்திரிகைகள் ஒரு படி மேலே போய் வைகோவுக்கும் – தி.மு.கவுக்கு உரசல் தி.மு.க கூட்டணியில் விரிசல் என செய்திகள் வெளியிட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த வைகோ நேற்று நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பேசிய போது, ஊடகங்கள் தான் அமைச்சர்களை பாராட்டி பேசியதை மட்டுமே ஒளிபரப்பியதாக குறைபட்டுக் கொண்டார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தான் முதுகெலும்பு இல்லாதவர் என்று விமர்சித்ததை எந்த ஊடகமும் ஒளிபரப்பவில்லை என்றும் தெரிவித்தார். 

புயல் நிவாரணப் பணிகளில் முதலமைச்சரின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்று ஆனால் அமைச்சர்கள் தனிப்பட்ட முறையில் சிறப்பாக செயல்படுவதாக நடுநிலையோடு தான் கூறியதாகவும், இதனை வைத்து தி.மு.க கூட்டணியில் பிளவை ஏற்படுத்த முயற்சி நடைபெறுவதாகவும் வைகோ விளக்கம் அளித்தார். மேலும் ம.தி.மு.க உறுதியுடன் தி.மு.க கூட்டணியில் தொடர்வதாகவும் தெரிவித்தார். ஆனால் ஸ்டாலினோ, வைகோ சேம் சைட் கோல் போட்ட டென்சனில் தான் தற்போது வரை உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் சில வாரப்பத்திரிகைகளில் செய்தி வெளியானது போல் தி.மு.க கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவே கூறப்படுகிறது.