சேலம், கச்சிராப்பாளையம் ஏரியில் மண் அள்ள அனுமதி அளித்துள்ளது சட்டவிரோதமானது என்றும் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டதற்கு திமுக செயல் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஏரிகள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தங்களது சொந்த செலவில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முக்கியமான ஏரிகளில் திமுக சார்பில் தூர்வாரப்பட்டு வருகின்றன.

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள  கச்சிராப்பாளையம் ஏரியை கடந்த வாரம் திமுகவினர் தூர்வாரி சுத்தம் செய்தனர். இந்த  ஏரியை பார்வையிட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சேலம் வருகிறார்.

இந்த நிலையில், கச்சிராப்பாளையம் ஏரியில் இருந்து வண்டல் மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் சேலம் - கோவை சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து, அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட திமுகவினரை கைது செய்தனர். 

இந்த நிலையில், திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், கச்சிராப்பாளையம் ஏரியில் இருந்து மண் அள்ள அனுமதித்துள்ளது சட்டவிரோதமானது என்று கூறியுள்ளார்.

சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினரை போலீசார் கைது செய்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாது காவல்துறையினர் அராஜகச் செயல்களில் ஈடுபட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கச்சிராப்பாளையம் ஏரியில் தூர்வார முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்திருந்தால், திமுக இதில் ஈடுபடும் அவசியம் ஏற்பட்டிருக்காது எனவும் சேலம் மாவட்டத்தில் அமைதியை நிலைநாட்ட உள்துறை செயலாளர் முன் வர வேண்டும் எனவும் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.