தஞ்சை மாவட்டம்  மாதாகோட்டை ஊராட்சி சபை கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார். அப்போது  பேசிய அவர், ஆட்சி மாற்றம் வரவேண்டும் என நம்மை விட மக்களுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலோ அல்லது உள்ளாட்சி தேர்தலோ வரலாம்.  தமிழகத்தின் அவல நிலைக்கு காரணமான அ.தி.மு.க.-பா.ஜ.க. அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரமிது என குறிப்பிட்டார்.

கருணாநிதி மருத்துவமனையில் இருந்தபோது உடல்நிலை குறித்து முறையாக அறிக்கை கொடுத்தது தி.மு.க.  ஆனால் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது உடல்நிலை குறித்து தெளிவான அறிக்கைகள் வழங்கப்படவில்லை. ஜெயலலிதா மறைவில் மர்மம் உள்ளது. அதற்கு யார் காரணம் என்றாலும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களை சிறையில் அடைப்போம் என அதிரடியாக தெரிவித்தார்..

நாம் நினைப்பவர்கள் பிரதமராக வந்தால்தான் தமிழகத்திற்கு தேவையானதைப் பெறமுடியும். மத்திய, மாநில அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அது தி.மு.க.வுக்கு தொடக்கப் புள்ளியாக இருக்க வேண்டும் என  ஸ்டாலின் தெரிவித்தார்.