இடதுசாரிகளுக்கு ரூ.25 கோடி திமுக கொடுத்தது ஏன் என்பது தான் தற்போது ஸ்டாலினை விடாமல் துரத்தும் கேள்வி. இந்த கேள்வி வரும் என்பதால் நேற்று விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்காமல் நழுவிச் சென்றார் ஸ்டாலின். ஆனாலும் விடாமல் செய்தியாளர்கள் திமுக பிரபலங்கள் யாரை பார்த்தாலும் இடதுசாரிகளுக்கு ஏன் பணம் கொடுத்தீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

வழக்கமாக எந்த கேள்வி என்றாலும் சளைக்காமல் பதில் அளிக்கும் திமுகவினர் 25 கோடி ரூபாய் மேட்டர் என்றால் மட்டும் நழுவிச் செல்கின்றனர். இதற்கிடையே பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று இந்த விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த திமுக தரப்பை அழைப்பு விடுத்தது. ஆனால் எங்கள்தரப்பில் யாரும் வர முடியாது என்று கண்டிப்பாக கூறியுள்ளனர் திமுகவினர்.

இதற்கிடையே கூட்டணி வைத்துக் கொள்ள இடதுசாரிகளுக்கு திமுக கொடுத்த லஞ்சம் தான் ரூ.25 கோடி என்று பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் கூட திமுகவினர் அசர்ந்தது போல் தெரியவில்லை. சமூக வலைதளங்களில் கூட இந்த விவகாரம் குறித்து திமுகவினர் மூச்சு விடுவதில்லை. ஏன் என்று விசாரித்த போது தான் ஸ்டாலின் நேரடியாகவே இந்த விவகாரம் குறித்து யாரும் பேசக்கூடாது என்று கண்டிப்பான உத்தரவு போட்டிருப்பதாக சொல்கிறார்கள்.

சீனியர் லீடர்கள் துரைமுருகன் உள்ளிட்டோரும் கூட இந்த விஷயம் தொடர்பாக எதுவும் பேசக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்களாம். இதனால் இடதுசாரிகளின் இமேஜ் தான் டேமேஜ் ஆகிறது. எனவே திமுக 25 கோடி விவகாரத்தில் ஏதேனும் அறிக்கை வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று அந்த கட்சிகள் தரப்பில் இருந்து திமுகவை தொடர்பு கொண்டதாகவும் கூறுகிறார்கள்.

ஆனால் திமுக தொடர்ந்து சைலன்டாகவே இருப்பதன் பின்னணி என்ன என்றுதான் தெரியவில்லை.