stalin statement about sufferings of farmers

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளின் வேதனைக் குரலுக்கு மத்திய,மாநில அரசுகள் நியாயம் வழங்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழக விவசாயிகள் மிகக் கடுமையான வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்கொண்டு வருகின்றனர் என்றும் குறிப்பாக, காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இதே நிலைதான் என்றும் இதன் காரணமாக, 200க்கும் அதிகமான விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களில் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பால் மரணமடைந்தும் உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகள் தங்களின் உரிமைகளை வலியுறுத்தும் வகையில் தமிழக விவசாயிகள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 5 நாட்களாகத் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

மேலும் மத்திய அரசு உடடினயாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்பது உள்பட தங்களின் அடிப்படைக் கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்களின் போராட்டம் வெயிலிலும், குளிரிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

போராட்டக்களத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகளை தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்துள்ளார். என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

போராடும் விவசாயிகள் மீது அக்கறை செலுத்த தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு தயாராக இல்லை என்றும் . மத்தியில் ஆளும் பாஜக அரசும் இந்தப் போராட்டத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்

மத்திய, மாநில அரசுகளாலும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், தமிழகத்தில் போராடினால், செயலிழந்த அரசின் காதுகளில் விழாது என்பதால் டெல்லிக்கு தங்கள் சொந்த செலவில் சென்று போதிய உணவு உள்ளிட்ட வசதிகள் எதுவுமின்றி, குடிநீர்கூட கிடைக்காத நிலையில், தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

5 நாட்களாகப் போராடிக் கொண்டிருக்கும் தமிழக விவசாயிகளை நோக்கி மத்திய அரசின் பார்வை திரும்ப வேண்டும் என்றும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு விரைந்து நிறைவேற்றி, அவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.