அண்மையில் நடைபெற்ற தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் அதிமுகவைவிட திமுக அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. இது குறித்து திமுக  தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் , நடந்து முடிந்துள்ள உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியின் அராஜகம், அதிகார துஷ்பிரயோகம், தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறை ஆகிய எதிர்மறைக் கூறுகளை மீறி தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.

எத்தகைய அராஜகத்தையும், அடாவடிகளையும் மீறி வெற்றி பெறும் வல்லமை மாபெரும் மக்கள் சக்திக்கு உண்டு என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் மெய்ப்பித்துக் காட்டி இருக் கின்றன. தி.மு.க. மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும், கொண்டுள்ள விருப்பமும், ஆளும்கட்சி மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பும் இதன் மூலமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

வெற்றி பெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகளை மனமார வாழ்த்துவதுடன், தி.மு.க. கூட்டணி மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

‘உள்ளாட்சியில் நடந்து வரும் ஊழலாட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க, தி.மு.க. கூட்டணியின் சார்பில் தேர்ந் தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சிறப்போடும், நியாயமாகவும் நேர்மையோடும் செயல்படுவார்கள். மக்கள் நலத்திட்டங்களை உண்மையாகவும், முழுமையாகவும் மக்களுக்குப் பயன்பெறும் திட்டங்களாக மாற்றுவார்கள்’ என்று உறுதி அளிக்கிறேன். என குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. அமைச்சர்கள் மாவட்டங்கள் வாரியாக முகாமிட்டும், பணத்தை வாரி இறைத்தும் அவர்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தத்தேர்தலில் சில நம்பிக்கை நிறைந்த காட்சிகளும் இருந்தன. திருப்பூர் மாவட்டத்தில் 82 வயது மூதாட்டியும், மேலூரில் 79 வயது மூதாட்டியும், தோவாளையில் 73 வயது மூதாட்டியும் வெற்றி பெற்றுள்ளார்கள்.

கிருஷ்ணகிரியில் 21 வயது கல்லூரி மாணவி ஒருவரும், வெற்றி பெற்றுள்ளார். விருதுநகர் மாவட்டம் கான்சாபுரத்தில் துப்புரவுத் தொழிலாளியான பெண் ஒருவர், தான் வேலை பார்த்த ஊராட்சிக்கே தலைவி ஆனது மக்களாட்சியின் மாண்புக்கு உதாரணம் ஆகும். திருச்செங்கோடு ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட திருநங்கை ரியா பெற்றுள்ள வெற்றி, விளிம்பு நிலை மக்கள் அதிகாரம் பெறத் தொடங்கியதன் அடையாளம்.

அதே நேரத்தில் நகர்ப்புற ஊராட்சி அமைப்புகளுக்கும் சேர்த்து நடத்தி இருந்தால் தி.மு.க. இன்னும் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கும். இன்னும் முழுமையான முடிவுகள் வராத நிலையில், இதுவரை வெளியான முடிவுகளில் பெரும்பான்மை வெற்றியை தி.மு.க. கூட்டணிக்குக் கொடுத்திருக்கும் தமிழக வாக்காளர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தனது அறிக்கையில் மு.க.ஸடாலின் தெரிவித்துள்ளார்..