Stalin started campaigning through whatsapp...!
கொளத்தூரின் செல்ல பிள்ளையாக இருந்தாலும், ஆர்.கே.நகரின் வளர்ப்பு பிள்ளை மருது கணேஷ் என்றும், ஆர்.கே.நகரின் வளர்ச்சி பணிகளை மருதுகணேஷ் மேற்கொள்வார் என்றும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தை வாட்ஸ் அப் மூலம் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கியுள்ளார்.
சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக, திமுக, டிடிவி தினகரன் என வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் 19 ஆம் தேதியுடன் பிரச்சாரம் முடியும் நிலையில், தற்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
ஆர்.கே.நகரில் கடந்த முறை, இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிகிக்கப்பட்டு, பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு, தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னெச்சரிக்கையை எடுத்து வருகிறது.
ஆனாலும், ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா சூடுபிடித்துள்ளது. ஆர்.கே.நகரில், ஆளுங்கட்சி சார்பில் 100 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்து விட்டது என்று திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், அதிமுக படுத்து உருண்டு குட்டிக்கரணம் அடித்தாலும் டெபாசிட் வாங்கப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து, மு.க.ஸ்டாலின், மூன்று நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
ஸ்டாலின் தற்போது வாட்ஸ் அப் மூலமாகவே தன் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார். அதில், மருது கணேஷ், கொளத்தூர் செல்லப்பிள்ளை. ஆனால், ஆர்.கே.நகரின் வளர்ப்பு பிள்ளையாக கருதி வளர்ச்சி பணிகளை மேற்கொள்வார். அனைத்து நிலைகளிலும் தமிழகம் பின்தங்கியுள்ளது. மாநிலத்தின் உரிமைகளை ஒவ்வொன்றாக மாநில அரசு இழந்து வருகிறது. அரசை மாற்றுவதற்கான தொடக்க புள்ளியாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அமையட்டும். என்று வாட்ஸ் அப்பில் ஸ்டாலின் பேசும் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.
