தலைவர் கருணாநிதி இல்லாதது மிகுந்த வருத்தத்தை அளித்தாலும், அவருக்கு உடல்நலம் தேறும் அளவுக்கு ஓய்வு தேவை என்பதால் நன்கு யோசித்து தலைவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என மு.க.ஸ்டாலின் கூறினார்.

பின்னர், தான் அரசியலில் கடந்து வந்த பாதை குறித்தும், அரசியலில் எப்படி அடியெடுத்து வைத்தது என்ற பழைய கதைகளையும் ஸ்டாலின் விரிவாக கூறினார்.

“இளைஞரணி மற்றும் பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு படிப்படியாக முன்னேறி வந்தேன். துணை பொதுசெயலாளர் பொருளாளர், இளைஞரணி செயலாளர் என பதவிகள் அறிவிக்கப்படும்போதெல்லாம் நான் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.

ஆனால், செயல் தலைவர் என்ற பெரிய பொறுப்பு கொடுக்கும்போது, நான் அந்த அளவுக்கு மகிழ்ச்சியில் இல்லை” என வேதனை தெரிவித்தார். கட்சியின் தலைவர் கருணாநிதி, இந்த இடத்தில் இருந்து அறிவிக்காததே, இதற்கு காரணம் என ஸ்டாலின் பேசினார்.

பின்னர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொண்ட மு.க.ஸ்டாலின், பேராசிரியர் அன்பழகன் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று கொண்டார். இதைதொடர்ந்து மூத்த நிர்வாகிகள், அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.