ஆனால் நீங்கள் ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தீர்கள். நீங்கள் முதலமைச்சராக வேண்டும், முதலமைச்சராக வேண்டும், முதலமைச்சராக வேண்டும் என்று வாய் கிழியப் பேசுகிறீர்களே, நீங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது என்ன செய்தீர்கள்?  

எடப்பாடியார் சாமானியர் ஆனால் அவர், விவசாயிகளின் கடன்களை ரத்து செய்தார், காவேரி பாய்கிற டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்தார் ஆனால் நீங்கள் என்ன செந்தீர்கள் என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஸ்டாலின் எதையும் செய்யவில்லை. இனியும் அவர் எதையும் செய்யப் போவதும் இல்லை என அவர் சரமாரியாக விமர்சித்துள்ளார். 

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி. குன்னத்தூரில் அமைந்துள்ள அம்மா கோவில் வளாகத்தில் இன்று மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் அதிமுக கழகம் சார்பில் கட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருமங்கலம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட நகர, கிராமப்புற கட்சியின் கிளை கழகச் செயலாளர்கள், கட்சியின் பல்வேறு அணி மாவட்ட, வட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வருகிற சட்டசபைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிப் பெறத் தேவையான வியூகங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ஜெயலலிதா அதிமுகவை இந்தியாவில் 3வது மாபெரும் இயக்கமாக உருவாக்கினார். 

அம்மா கனவு கண்ட மாதிரி, இந்த அதிமுக நூறாண்டுகள் கடந்தும் அன்னை தமிழகத்தில் அரசாள வேண்டும், எடப்பாடியார் மீண்டும் முதல்வராக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் OPS முன்மொழிந்து ஒன்றரை கோடி தொண்டர்கள் வழி மொழிந்து இருக்கிறோம். இபிஎஸ்சும், ஓபிஎஸ்சும் அம்மாவுடைய அரசையும் அம்மாவுடைய கட்சியையும் பாதுகாத்து, வளர்த்து புரட்சித் தலைவரும் புரட்சித் தலைவியும் கண்ட கனவை நனவாக்கி இருக்கிறார்கள். திமுக ஆட்சி அதிகாரத்தில் மத்திய அரசாங்கத்தில் இருந்த போது, முல்லைப் பெரியாறு உரிமையை, காவேரி உரிமையை மீட்டு தந்தீர்களா? என்ன உரிமையைப் பெற்று தந்தீர்கள்? கச்சத் தீர்வு உரிமையைக் காவு கொடுத்தீர்கள். அண்ணன் எடப்பாடியார் ஒரு சாமனியர். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த காவேரிக்கு தீர்வு கண்டவர், நமது காவேரி காப்பாளர் எடப்பாடியார். 

காவேரி பாய்கிற டெல்டா பகுதியை ஒரு பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து இருக்கிறார் எடப்பாடியார். நீங்கள் செய்தீர்களா? காவேரி மண்டலத்தில் பிறந்தவர் நீங்கள் என்று சொல்கிறீர்களே? விவசாயிகளின் நாடி நரம்புகளில் கலந்து இருக்கிற ஒரு சாமானிய விவசாயி எடப்பாடியார் விவசாயிகளுக்காக எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். ஆனால் நீங்கள் ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தீர்கள். நீங்கள் முதலமைச்சராக வேண்டும், முதலமைச்சராக வேண்டும், முதலமைச்சராக வேண்டும் என்று வாய் கிழியப் பேசுகிறீர்களே, நீங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது என்ன செய்தீர்கள்? விவசாயிகளின் கடனை இரண்டு முறை தள்ளுபடி செய்தது அம்மா உடைய அரசு மட்டும்தான்.