இந்தியா முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் அசுர வேகம் எடுத்துள்ளது. நேற்று ஒரே நாளில் 600 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,009 ஆக உயர்ந்து இருக்கிறது. இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு தமிழ்நாட்டில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் நேற்று முன்தினம் முதல் மீண்டும் திறக்கப்பட்டன. தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்படும் என அரசு அறிவித்திந்திருந்தது.

கொரோனா பரவுதல் அதிகரித்து வரும் சூழலில் டாஸ்மாக் கடைகளை திறப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து மக்கள் நீதி மைய்யம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையில் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. இதற்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். நிர்வாகத் திறமையற்ற அதிமுக அரசுக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியான பாடம் என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், நிர்வாகத் திறமையற்ற #குடிக்கெடுக்கும்_அதிமுக அரசுக்குத் தக்க பாடமாக, ஊரடங்கு காலம் முடியும் வரை மதுக்கடைகளை மூடவேண்டும் என்னும் உயர்நீதிமன்றத்தின் ‘மக்களைக் காக்கும்’ உத்தரவை திமுக வரவேற்கிறது. மேல்முறையீட்டு முயற்சிகளைத் தவிர்த்து உத்தரவை ஏற்று அதிமுக அரசு நடக்க வேண்டும்.

 

மத்திய அரசிடமிருந்து நிதி பெறும் வலிமையின்றி மக்கள் மீது பழி போட்டு அதிமுக அரசால் திறக்கப்பட்ட மதுக் கடைகளின் முன்பாக முதல் நாளே சமூக ஒழுங்கின்றி பெருங்கூட்டம் கூடியது. அத்தியாவசியப் பொருட்கள் வாங்க செல்பவர்களிடம் கூட கெடுபிடி காட்டிய காவல்துறை டாஸ்மாக்கிற்கு வந்தவர்களையும் அவர்களது பாட்டில்களையும் பாதுகாக்கும் பணியில் ஈடுபட நேர்ந்தது அவலம். பெண் காவலர்களும் அவதிக்குள்ளாகியதை தமிழகம் பார்த்தது. நோய்த்தொற்று பரவுகிற சூழலில் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று தான் கருப்பு சின்னத்துடன் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம்.

டாஸ்மாக் கடைகளை ஊரடங்கு காலம் முடியும் வரை மூட வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நிர்வாக திறமையற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு தக்க பாடம். அரசின் மோசமான செயல்பாட்டில் இருந்து மக்களை காப்பாற்றும் வகையிலான நீதிமன்றத்தின் இந்த உத்தரவை திமுக வரவேற்கிறது. உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு முயற்சிகளை கைவிட்டு மக்களின் உயிரை பணையம் வைக்காமல் நீதிமன்ற உத்தரவை ஏற்று அதிமுக அரசு நடக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.