தமிழக சட்டப் பேரவையை கூட்டினால்தான் எடப்பா அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முடியும் என்றும் இந்த அடிப்படை சட்ட அறிவு கூட இல்லாமல் பாஜகவின் எச்.ராஜா சவால் விட்டுக் கொண்டிருக்கிறார் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் தமிழக சட்டப் பேரவையில், அரசு மீது நம்பிக்கை இல்லாதீர்மானம் கொண்டு வரட்டும் என பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா சவால் விட்டிருந்தார்.

இதே போன்று தைரியம் இருந்தா, தெம்பு இருந்தா, துணிவிருந்தா, ஸ்டாலின் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முடியுமா ? என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்திருந்தார்.

இது குறித்து சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சநதிப்பில் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஸ்டாலின், நம்பிக்கை இல்லா தீர்மானம் சட்டப் பேரவையில்தான் கொண்டு வரப்பட வேண்டும் என்றும், சட்டப் பேரவையை கூட்டுவதற்கு ஆளுநருக்குத்தான் அதிகாரம் உண்டு என்றும் தெரிவித்தார்.

சட்டப் பேரவையை கூட்டினால் தானே நம்பிக்கை இல்லாதீர்மானம் கொண்டுவர முடியும் ? இந்த அடிப்படை சட்ட அறிவு கூட இல்லாமல் ராஜா சவால் விடுவது சரியில்லை என ஸ்டாலின் கூறினார்.

தமிழகத்தில் தற்போது நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டம், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டம், நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் என அனைத்துத் தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

எனவே நிர்வாக திறன் இல்லாத இந்த அரசு கலைக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்தார்.