தமிழகத்தை குத்தகைக்கு எடுத்தது போல் கொள்ளையடித்து வருகிறார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதற்கு அதிமுக பதிலடி கொடுத்துள்ளது.

 

கழுத்தைப்பிடித்து தள்ளினாலும் கால் பிடித்தே வாழ்பவர்கள் என்கிற தலைப்பில் நமது அம்மா நாளிதழில் கட்டுரை வெளியாகி உள்ளது. அதில்,’’தமிழகத்தை குத்தகைக்கு எடுத்தது போல் கொள்ளையடித்து வருகிறார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அதிமுக மீது அவதூறு பரப்புகிறார். என்ன செய்வது ஸ்பெக்ட்ரம், நிலக்கரி, உரபேரம், காமன்வெல்த் ஹெலிக்காப்டர் என்றெல்லாம் திமுகவும், காங்கிரசும் மத்தியிலும், மாநிலத்திலும் பரஸ்பரம் விட்டுக் கொடுத்துக் கொண்டு அடித்த கொள்கைகளால் தான் இரண்டு இயக்கங்களும் மக்களால் வீட்டுக்கு அனுப்பப் பட்டன. 

திமுக செய்த ஊழல் பாவ மூட்டைகளை நாங்கள் சுமக்க வேண்டிய வந்தது என்று காங்கிரஸும்,  குப்புறத் தள்ளியது மட்டுமல்லாமல் குழியும் பறித்தது என்று திமுகவும் ஒருவரை ஒருவர் தாக்கி ஒப்புதல் வாக்குமூலத்தை கொடுத்ததை எல்லாம் நாடே அறியும். அப்படி கொள்ளையடித்த பணத்தை வைத்து ஓட்டுக்கு பணம் என்கிற திருமங்கலம் பார்முலாவை தொடங்கிய திமுக. இப்போது கொங்குநாடு ஈஸ்வரனுக்கு 15 கோடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 25 கோடி, இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 15 கோடி என்று கட்சிகளையே விலை பேசி வாங்கி ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்கி இருக்கிறது.

இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் வெட்கம், மனம் துளியும் இல்லாமல், ’’ஓட்டு இல்லாத கட்சியே வெளியே போங்கடா’’என்று திமுக பொருளாளர் துரைமுருகனை விட்டு ஸ்டாலின் கழுத்தை பிடித்து வெளியே தள்ளி பிறகும் பல் இளைத்துக் கொண்டு அதே திமுகவின் கால் பிடித்து வாழுகிற காங்கிரஸ் கட்சி, கழக ஆட்சியை பழிக்கலாமா?

 திமுகவும், காங்கிரஸும் சேர்ந்துகொண்டு வஞ்சித்த காவிரி உரிமையை மீட்டதும்,  கருணாநிதி மகன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு வந்து மீத்தேன் அபாயத்துக்கு முற்று வைத்ததும், ஸ்பெக்டரம் பங்காளிகளான திமுக-காங்கிரஸ் இணைந்து தடைபோட்ட தொட்ட ஜல்லிக்கட்டை மீட்டு வாடிவாசல் திறந்து விட்ட வரலாற்று புரட்சியை படைத்ததும், இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் தமிழகம் என்னும் அளவுக்கு தலை சிறந்த நிர்வாகத்திற்காக அமைதியான சட்டம் ஒழுங்கிற்காகவும், இந்திய அரசின் பெருமை மிக்க விருதினை பெற்றிருப்பதும், சீன அதிபர் இந்தியா வந்து பாரத பிரதமரோடு ஆற அமர்ந்து உலக அரசியல் பேசுகிற உன்னத வாய்ப்பை தமிழகத்துக்கு உரித்தாக்கியதும் என மக்களின் மகோன்னத ஆதரவோடு நல்லாட்சி நடத்துகிற எளியோரின் முதல்வர் எடப்பாடியாரின் ஆட்சியை குத்தகைக்கு எடுத்து நடத்துகிற கொள்ளை என்று கே.எஸ்.அழகிரி விமர்சிப்பது எங்கே திமுக கொடுக்கிற அழுத்தத்தால் அகில இந்திய காங்கிரஸ் தனது தமிழ்நாடு தலைவர் பதவியை பறித்து விடுமோ என்கிற அச்சத்தால் திமுகவுக்கு கை, கால் அமுக்கி விடுகிற காரியம் தானே இது’’ என விமர்சித்துள்ளது.