Asianet News TamilAsianet News Tamil

மத்திய அரசை நம்பி பயனில்லை! நாமதான் அவங்கள காப்பத்தனும்... மா. செ களுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு...

இயற்கை பேரிடரில் சிக்கித் தவிக்கும் கேரளாவுக்கு உதவிடுமாறு, திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Stalin's request for DMK district secretaries
Author
Chennai, First Published Aug 19, 2018, 8:50 AM IST

கேரளா மாநிலம் தொடர் மழை மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  கடந்த 10 நாட்களாகப் பெய்துவரும் பெருமழையால் இதுவரை 324 பேர் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 2,094 முகாம்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3 லட்சத்து 14 ஆயிரத்து 391 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏராளமான மக்கள் தங்களது வீடுகள், உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். 

இந்நிலையில் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், கேரளாவில் ஏற்பட்டுள்ள இயற்கைப் பேரிடரில் 324க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள் என்ற துயரச் செய்தி இதயத்தை நிலைகுலைய வைத்திருக்கிறது. மத்திய அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட உதவிகள் இன்னும் கேரள மாநிலம் சென்றடையவில்லை என்று வரும் செய்திகள் வேதனையளிப்பதாக உள்ளன என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

அரசியல் வேறுபாடுகளை புறந்தள்ளி வைத்து விட்டு, பெருந்துயரத்தில் சிக்கித் தவிக்கும் கேரள மக்களுக்கு நேசக்கரம் நீட்டி அவர்களை இந்த பேராபத்திலிருந்து உடனடியாக மீட்பதற்கும், வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்கவும் மத்திய அரசு உடனடியாக உதவிகளைச் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், கேரள அரசுக்கு தேவையான நிர்வாக ரீதியான ஒத்துழைப்பையும், நிவாரண மற்றும் நிதியுதவிகளையும் தாராளமாக வழங்கிட தமிழக அரசு முன் வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

உடுக்க உடையின்றி, உண்ண உணவின்றி தங்களின் வீடுகளையும் இழந்த மக்களை கேரள மாநில அரசு முகாம்களில் தங்க வைத்து தேவையான உதவிகளை செய்து வருகிறது. மனித நேயமிக்க இந்தப் பணியில் திராவிட முன்னேற்றக் கழகமும் பங்கேற்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஆகவே, கழக மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் கழக உடன்பிறப்புகளிடமும், தாமாக மனமுவந்து உதவி செய்ய முன் வரும் பொதுமக்களிடமும் போதிய உணவுப் பொருட்கள், துணி மணிகள், போர்வைகள், நேப்கின்கள் உள்ளிட்ட அன்றாடத் தேவைக்குப் பயன்படும் பொருட்களைச் சேகரித்து கேரள மாநிலத்தில் உள்ள கழக நிர்வாகிகள் மூலம் அம்மாநில மக்களுக்கு அளித்திட வேண்டும்” அவ்வாறு வழங்கப்படும் பொருட்களின் விவரங்களை தலைமைக் கழகத்திற்கு அனுப்பிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios