அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழில், ‘’புரட்டுக்காரனுக்கு புத்தி இருட்டின் மீது அல்லவா..?  என்கிற தலைப்பில் வெளியாகி உள்ள அந்தக் கட்டுரையில், ‘’அந்நிய முதலீட்டை வைத்து அவதூறு பரப்புகிறதே புரட்டொலி. என்ன செய்வது திருட்டுத் தனங்களின் பார்வையெல்லாம் இருட்டை நோக்கித் தானே இருக்கும். இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரிப்பும், பொருளாதார தடையும் வேண்டும் என தமிழக சட்டசபையில்  கழகம் இயற்றிய தீர்மானத்தை ஆதரிப்பதாக பகல் வேஷம் போட்டுவிட்டு அதே இன அழிப்பு இலங்கையில் இருபத்தி ஆறாயிரம் கோடி ரூபாயை சிங்கப்பூர் கம்பெனி மூலமாக முதலீடு செய்த இனத்துரோக திருட்டு கும்பலுக்கு பார்ப்பதெல்லாமும் பழுதாகத்தானே தோன்றும்.

 

அலைக்கற்றை எனப்படும் தேசத்தின் பாதுகாப்பு தொடர்புடைய ஸ்பெக்டரத்தை டாடாவுக்கு ஒதுக்க அவர்களில் 700 கோடி ரூபாய் மதிப்புடைய வோல்டாஸ் கட்டடத்தையே தங்கள் வீட்டு வேலைக்காரன் பெயரில்  லஞ்சமாக எழுதி வாங்கிக் கொண்டவர்கள்... அதுபோலவே பாகிஸ்தான் தொடர்புடைய பால்வாவிடம் 214 கோடி ரூபாயை அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்கு கையூட்டாக வாங்கி கருணாநிதி பெயரிலேயே தொலைக்காட்சி தொடங்கி விட்டு விவகாரம் வெளிப்பட்டு விட்டதும் சி.பி.ஐ விசாரணைக்கு போய் வந்த அப்பாவி இளைஞன் பெரம்பலூர் சாதிக்கை பரலோகம் அனுப்பி வைத்த பாதகர்களின் புத்தி பார்ப்பதில் எல்லாம் பழுதாகத்தானே இருக்கும். 

இப்படி கொள்ளையடிப்பதையே தங்கள் பொது வாழ்வின் குறிக்கோளாக கொண்டவருக்கு ‘தான் திருடி பிறரை நம்பாள்’ என்னும் கதையாக அந்நிய முதலீட்டை ஈர்த்து வந்த சாமானிய மக்களின் சாதனை முதல்வரான எடப்பாடியாரின் அயராத உழைப்பும் அவருக்கு மக்களிடையே ஏற்பட்டிருக்கும் புகழையும் களங்கப்படுத்த கதை புனைய பார்க்கிறது ஓ.சி.பிரியாணி கும்பல்.

 

ஆனாலும், சொல்வது யார் என்பதை விட சொல்பவனின் யோக்கிதை யாது என்பதை அறிவார்ந்த தமிழகத்து மக்கள் அலசி ஆராய்ந்து பார்ப்பார்கள். அதனால் புரட்டொலியின் புரளி செய்யும் குறளி வித்தை ஒரு நாளும் செல்லாது’’ எனக் கூறப்பட்டு இருக்கிறது.