கட்சராயன் ஏரியை பார்வையிட செல்லும்போது தன்னை கைது செய்தால், திமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடாமல், மனிதசங்கிலி போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி, தமிழகம் முழுவதும் திமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் 

இன்று நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இன்று சேலம் வருகை தர உள்ளார். அதேபோல் சேலத்தில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார். சென்னையில், நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் திமுக மாவட்ட செயலாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

சேலம், எடப்பாடியில் உள்ள கட்சராயன் ஏரியைப் பார்வையிட திமுக செயல் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று வருகை தர உள்ளார். சென்னையில் இருந்து புறப்பட்ட மு.க.ஸ்டாலின் கோவை விமான நிலையத்தை வந்தடைந்தார். அப்போது அவருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த நிலையில், கட்சராயன் ஏரியை பார்வையிட மு.க.ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சேலம் எஸ்.பி. ராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய எஸ்.பி. ராஜன், மு.க.ஸ்டாலின் வருகையால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதால், அவருக்கு அனுமதி மறுத்துள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து, கட்சராயன் ஏரி அருகே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கோவை விமான நிலையத்தில் வந்திறங்கிய மு.க.ஸ்டாலின், கட்சராயன் ஏரியை பார்வையிட செல்லும்போது, தன்னை கைது செய்தால், திமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடாமல், மனிதசங்கிலி போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.