stalin replies to dinakaran speech

திராவிட முன்னேற்றக் கழகம் மீது தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி அதன் மூலம் அரசியல் விளம்பரம் தேட தினகரன் முயற்சிப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலாவால் அதிமுக துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் டிடிவி.தினகரன். இவர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தொப்பி சின்னத்தில் போட்டியிடுகிறார். 

துணைப் பொதுச் செயலாளர் பதவியை ஏற்ற நாள் முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மீது விமர்சனங்களை முன்வைக்க தினகரன் தவறியதில்லை.

இந்தச் சூழலில் அதிமுக தலைமை அலுவலகத்தில் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, " அதிமுக ஆட்சியைக் கலைக்க எங்களது எம்.எல்.ஏ.க்களிடம் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பேரம் பேசி வருகிறார். தேர்தலில் வெற்றி பெற்று இரட்டை இலையை மீட்டெடுப்பேன். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டிய அவசியம் இல்லை." இவ்வாறு தினகரன் தெரிவித்திருந்தார். 

திமுக மீதான இக்குற்றச்சாட்டுக்கு மு.க.ஸ்டாலின் அளித்துள்ள பதிலில், " தவறான குற்றச்சாட்டுகள் மூலம் அவர்(தினகரன்) அரசியல் விளம்பரம் தேடிக் கொள்ள முயற்சிக்கிறார். இது போன்ற தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்க இயலாது" என ஸ்டாலின் கூறினார்.