கோவை, கனியூரில் இன்று காலை கைது செய்யப்பட்ட திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் மாலை விடுவிக்கப்பட்டார்.

நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி, தமிழகம் முழுவதும் திமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் இன்று மாலை நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. சென்னையில் திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். 

சேலத்தில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார்.

மேலும், சேலம், எடப்பாடி அருகே உள்ள கட்சராயன் ஏரியை பார்வையிடவும் அவர் இன்று சேலம் சென்றிருந்தார். கோவை விமான நிலையம் சென்ற அவர், அங்கிருந்து காரில், சேலம் நோக்கி சென்றார்.

கோவை அருகே கனியூர் சுங்கச்சாவடி பகுதியில் மு.க.ஸ்டாலினின் கார் போலீசாரால் நிறுத்தப்பட்டது. சேலத்திற்கு மு.க.ஸ்டாலின் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அவரிடம் போலீசார் கூறினர். போலீசாரின் தடையை மீறி மு.க.ஸ்டாலின் செல்ல முயன்றதை அடுத்து கைது செய்யப்பட்டார். 

இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ மனு ஒன்றை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விடுவிக்கப்பட்டார்.