stalin reaction to anna university vice chancellor appointment
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை துணைவேந்தராக நியமித்தது தமிழர்களின் தன்மானத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
காவிரி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழகத்திலும் மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என கர்நாடகாவிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
காவிரி விவகாரத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகா சார்பில் மத்திய அரசுக்கு அந்தந்த மாநிலங்களின் நிலைப்பாடுகளுக்கு தகுந்தபடி அழுத்தம் கொடுக்கப்படுகிறது. காவிரி விவகாரத்தில் எதிரெதிர் நிலைப்பாட்டை தமிழகமும் கர்நாடகமும் கொண்டுள்ளதால், பிரச்னை நீடித்து வருகிறது.
தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகளின் எதிர்ப்புகளையும் மீறி கர்நாடகாவை சேர்ந்த சூரப்பாவை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஆளுநர் நியமித்துள்ளார்.
இந்நிலையில், இதுதொடர்பாக ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், காவிரிப் பிரச்சினை கொளுந்து விட்டு எரிகின்ற நேரத்தில் தமிழகத்தின் தன்மானத்தின் மீது தாக்குதல் நடத்தும் வகையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே. சூரப்பா என்பவரை தமிழக ஆளுநர் அவர்கள் நியமித்திருப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், நம் மண்ணின் கல்வியாளர்களையும் அறிஞர்களையும் இழிவுசெய்யும் உள்நோக்கத்துடன் வெளி மாநிலங்களில் இருந்து வரிசையாக துணை வேந்தர் பதவிகளுக்கு இறக்குமதி செய்து தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகங்களை "காவி" மயமாக்க வேண்டாமென்று மாண்புமிகு ஆளுநர் அவர்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார்.
