காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் அடுத்த குன்றத்தூரில் இருக்கும் கோயில் குளத்தை திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தூர்வாரினார். 

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் தமிழக அரசு நிர்வாகத்தை கடுமையாகச் சாடினார். "தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி குடிநீர் பஞ்சத்தை போக்க அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவரித்தாடுகிறது. மக்கள் துயர் துடைக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. "

"ஆட்சியில் இல்லாவிட்டாலும் திமுக தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறது.எதிர்க்கட்சியாக இருந்தாலும் திமுக தான் ஆளுங்கட்சி என்று மக்கள் எண்ணிக் கொண்டுள்ளனர் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவே அதிமுக முயல்கிறது. மக்களைப் பற்றி கவலை இல்லை.திமுக நாடகம் நடத்துவதாகக் கூறுபவர்கள் தான் உண்மையி்ல் நாடகம் நடத்துகின்றனர்."

"தமிழகத்தின் பல்வேறு பிரச்சனைகள் குறித்துப் பேச பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். ஆனால் எந்தப் பொறுப்பிலும் இல்லாத ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த பிரதமர் மோடியால், தமிழக விவசாயிகளை சந்திக்க மறுத்துவிட்டார்."

"குடிநீர் வளம் காக்க நீர்நிலைகளை தூர்வாரும் பணியை சிலர் விமர்சனம் செய்வதால் அது எங்களுக்கு ஊக்கத்தையே அளிக்கும்." இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.