கருணாநிதி மீது வைக்கப்பட்ட விமர்சனங்களில் மிக முக்கியமானது ‘நாத்திகம் எனும் பெயரில் இந்து துவேஷம் மட்டுமே பேசுகிறார். சிறுபான்மையினரை அவர்களின் வாக்கு வங்கிக்காக சீண்ட மறுக்கிறார்.’ என்பதுதான்.

இதை கருணாநிதி மறுத்துப் பேசினாலும் கூட அவரது செயல்பாடுகள் மீண்டும் மீண்டும் அந்த விமர்சனம் எழுவதை உறுதி செய்தன. 
ஆனால் வாழ்க்கை காட்டாறு யாரை எங்கே கொண்டு போய் நிறுத்தும் என்று யாருக்கு தெரியும்? இந்து நம்பிக்கைகளுக்கு எதிராக சகட்டுமேனிக்கு சாடல் நடத்திய கருணாநிதி பிற்காலத்தில் மஞ்சள் துண்டு அணிய துவங்கியதும், புட்டபர்தி சாய்பாபாவை தன் வீட்டிற்கே அழைத்து மரியாதை செய்ததும் நடந்தது.

ஸ்டாலினும் அப்பாவின் வழியில் ஆன்மிகத்துக்கு எதிரானவராகதான் இருந்தார் துவக்கத்தில். ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னே நமக்கு நாமே பயணம் சென்ற போது பல இந்துகோயில்களை ஏறியிறங்கினார்.

துளசி தீர்த்தம் குடித்தார், பெருமாள் முடிக்கு தலைவணங்கினார். இதையெல்லாம் விட பல படிகள் மேலே போய் ‘தி.மு.க.வில் இருப்பவர்களில் 90% பேர் இந்துக்கள்தான்.’ என்றார். 

ஸ்டாலினின் இந்த தடாலடி மாற்றம் தலைவரை அதிர்ச்சியடைய வைத்தது. ஆனால் ஸ்டாலினின் இந்த மன மாற்றத்துக்கு பின் இருப்பது ‘துர்கா’ என்று கேள்விப்பட்டு தன் ஆதங்கத்தை அடக்கிக் கொண்டார். 

இந்நிலையில் கழகத்தின் செயல்தலைவராகி இருக்கும் ஸ்டாலின் சமீப காலமாக குளங்களை தூர் வாரும் பணிகளை துவக்கி வைத்துள்ளார். அதில் இந்து ஆலய குளங்களும் அடங்கும். வெறும் உத்தரவிடல் என்றில்லாமல் கோயில் குளங்களில் அவரே நேரடியாக களமிறங்கி மண்வெட்டியோ அல்லது மண் சட்டியோ தூக்குகிறார். 

இதை அ.தி.மு.க.வை விட பா.ஜ.க.தான் மிக நக்கலாக விமர்சிக்க துவங்கியுள்ளது. ‘செய்த பாவத்துக்கான பரிகாரமாகவே குளங்களை ஸ்டாலின் தூர் வாருகிறார்” என்று பொன்னார் போட்டுத்தாக்கியிருக்கிறார்.

இந்நிலையில் ஸ்டாலினுக்கு நெருக்கமான தி.மு.க.வினரோ இந்த திட்டத்தின் பின் புலமே அண்ணி துர்காதான் என்கின்றனர். 
துர்கா இயல்பிலேயே மிக தீவிரமான கடவுள் நம்பிக்கையுடையவர். தென்னிந்தியாவில் எந்த ஊரில் எந்த ஆலயம் பிரசித்தி, எந்த தெய்வத்தை வணங்கினால் எந்த பிரச்னைக்கு பரிகாரம் கிடைக்கும் என்று விரல் நுனியில் வைத்திருப்பவர்.

தான் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வதையோ அல்லது பூஜைகளில் கலந்து கொள்வதையோ கொஞ்சம் கூட மறைக்காமல் மிக வெளிப்படையாக செய்பவர் அவர். நாத்திக கருணாநிதியின் குடும்பத்தை சேர்ந்தவர் இப்படி ஆன்மிக தளங்களை தேடித்தேடி அலைகிறாரே என்று எதிர்கட்சிகள் விமர்சனம் வைத்தபோது கூட நாலு பேருக்கு தெரியாமல் கோயிலுக்கு போகும் வழக்கத்தை வைக்காமல் உச்சிகால பூஜை நடக்கும் பரபர பொழுதுகளிலேயே கூட ஆலயங்களுக்கு செல்வார்.

பத்திரிக்கையாளர்கள் மறைந்திருந்து புகைப்படம் எடுத்தால் கூட ‘தம்பி இங்கே வந்து நின்னு நல்லாவே எடுங்க.’ என்று நேர்மையாக ஒத்துழைக்கும் பெண்மணி.

நமக்கு நாமே பயணத்துக்காக தமிழகத்தின் எல்லா மாவட்டங்களுக்கும் ஸ்டாலின் சென்றபோது அந்த பகுதியிலிருக்கும் முக்கிய ஆலயங்களுக்குள் முடிந்தால் ஒரு விசிட் அல்லது அந்த வழியே பயணம் என்று திட்டத்தை வகுக்கும்படி ஸ்டாலினை வேண்டி வலியுறுத்தி கேட்டுக் கொண்டவர் துர்கா. 

காரணம், அரசியலில் வெறித்தனமாக உழைக்கும் தன் கணவருக்கு உன்னதமான அங்கீகாரமான முதல்வர் பதவியென்பது மக்களின் அங்கீகாரம் மூலம் வரவேண்டும் என்பது துர்காவின் ஆசை. திருமணமான சில நாட்களிலேயே இளம் கணவனை மிசா சிறை இழுத்துக் கொள்ள ’அவர் மீண்டு வருவார், அரசியலில் மீண்டும் எழுவார்.’ என்று இரும்பு இதயத்தோடு காத்திருந்த பெண்மணி. 

தன் மீதான அரசியல் விமர்சனங்களை ஸ்டாலின் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார். ஆனால் அவை எல்லை மீறுகையில் கலங்கிப்போவார் துர்கா. அப்போதெல்லாம் அவருக்கான இரண்டு ஆறுதல்களில் ஒன்று ஆலயம் மற்றொன்று ஸ்டாலினின் தளராத போராட்ட குணம் தரும் ஊக்கம். 

இயக்கத்தை தேர்தல் அரசியலில் கரைசேர்க்க ஸ்டாலின் நடத்தும் போராட்டங்களுக்கு , ஒரு அணில் போல் துர்கா செய்யும் உதவிதான் இந்த ஆன்மிக டச்சிங். ஆலய குளங்களை தூர்வாருவதன் மூலம் அந்த குளத்தில் நீர்வளம் மிகும். அந்த நீரால் பகவானுக்கு அபிஷேகம் நிகழும். அபிஷேகத்தால் குளிரும் பகவான், தூர்வாரல் எனும் புனித பணியை செய்த மனிதனை அகம் குளிர ஆசீர்வதிப்பான்...என்பது ஐதீகம். 

ஸ்டாலினும் அப்படி கடவுள்களின் ஆசீர்வாதத்தை பெற வேண்டும் என்பதுதான் துர்காவின் எண்ணம். அதனால்தான் அவரிடம் வேண்டி விரும்பி இந்த காரியங்களை செய்யும் படி அன்பாய் நச்சரித்து நிறைவேற்றியுள்ளார் துர்கா என்கிறார்கள்.

கூடவே ஆலய குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர் வாரப்படுவதால் நீரின் கொள்ளளவு அதிகமாவதோடு சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீரும் பெருகும். ஆக மக்களும் மகிழ்வர். இப்படி பகவான், பப்ளிக் இந்த இரண்டு பேரிடமும் நல்ல பெயரும், மனசார வாழ்த்தையும் பெற்றுக் குவித்தால் வாழ்வில் எழுச்சி தானே வந்து சேருமல்லவா!

ஆனால் இது புரியாமல் பா.ஜ.க.வினரோ ‘செய்த பாவங்களுக்காக ஸ்டாலின் பரிகாரம் தேட தூர்வாருகிறார்.’ என்று களங்கப்படுத்துவதாக துர்காவுக்கு வருத்தமாம்.

இதற்காக பா.ஜ.க.வுக்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்து இந்த அரசியல் சம்பாஷனைகளை வளர்த்துக் கொண்டே போய் அதிலும் ஒரு அரசியல் செய்ய இவரென்ன குஷ்புவா என்ன?!