திமுகவின் தலைவர் கருணாநிதி வயது முதிர்வு காரணமாக அரசியலிலிருந்து ஒதுங்கி ஓய்வு எடுத்துவருகிறார். அதனால் திமுகவின் செயல் தலைவராக பொறுப்பேற்று திமுகவை ஸ்டாலின் வழிநடத்துகிறார்.

திமுகவின் செயல் தலைவராக பொறுப்பேற்ற பிறகு சந்தித்த முதல் தேர்தல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். ஆளும் அதிமுகவின் மீது மக்களின் அதிருப்தி ஓங்கியிருந்த போதிலும், ஆளுங்கட்சி மீதான மக்களின் அதிருப்தியை அறுவடை செய்து ஆர்.கே.நகரில் வெற்றி பெற முடியாத திமுக, டெபாசிட்டையே இழந்தது.

அதன்பிறகு, கட்சியை பலப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை ஸ்டாலின் எடுத்துவருகிறார். மாவட்ட வாரியாக மாவட்ட செயலாளர்கள், கட்சியின் மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்து வருகிறார்.

அந்த வகையில், தேனி, திருநெல்வேலி, சிவகங்கை ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது உட்கட்சி பூசல், கட்சியை வளர்த்தல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது, கட்சியின் வளர்ச்சி மற்றும் நலனுக்காக கட்சியில் மட்டும் சர்வாதிகாரியாக நடந்துகொள்ள ஸ்டாலின் அனுமதி கேட்டுள்ளார். சர்வாதிகாரியாக செயல்படவே அனுமதி கேட்கும் ஸ்டாலின் எப்படி சர்வாதிகாரியாக செயல்பட போகிறார்? என அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், ரஜினி மற்றும் கமல் அரசியலில் அடியெடுத்து வைத்துவிட்டதால், திமுகவில் உள்ள அவர்களது ரசிகர்கள் எப்படியும் தங்கள் ஆஸ்தான ஹீரோக்களுக்கே வாக்களிப்பர். அப்படியிருக்கையில், சர்வாதிகாரமாக செயல்பட்டு இருக்கிற கட்சிக்காரர்களையும் இழந்துவிடக்கூடாது என்ற பயத்தில்தான் சர்வாதிகாரியாக செயல்பட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடமே அனுமதி கேட்கிறார் ஸ்டாலின்.

சர்வாதிகாரியாக செயல்படவே கட்சிக்காரர்களிடம் அனுமதி கேட்கும் ஸ்டாலின், சர்வாதிகாரியாக செயல்பட தகுதியானவரா? அனுமதி கேட்கும் அந்த இடத்திலேயே  சர்வாதிகாரிக்கான தகுதி தன்னிடம் இல்லை என்பதை ஸ்டாலினே ஒப்புக்கொண்டுவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.