தமிழகத்தில் அதிமுக  ஆட்சி நடக்கிறதா அல்லது பாஜக ஆட்சி நடக்கிறதா ? என கேள்வி எழுப்பிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், இபிஎஸ்ம், ஓபிஎஸ்ம் மோடி அரசுக்கு அடிக்கும் ஜால்ரா சத்தம் காதைப் பிளக்கிறது என கிண்டல் செய்தார்.

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில், உத்தரப்பிரதேசத்தில் இருந்து ரத யாத்திரை தொடங்கி நடைபெற்று வருகிறது. ராமஜென்ம பூமியில் ராமர்கோயில், ராமராஜ்ஜியத்தை மீண்டும் அமைத்தல், கல்வி பாடத்திட்டத்தில் ராமாயணம், உலக இந்து தினம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ரத யாத்திரை தொடங்கப்பட்டது.

மத்தியப்பிரதேசம், மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா வழியாக தமிழகம் வந்துள்ள இந்த ரத யாத்திரை, ராஜபாளையம் , ஸ்ரீவில்லிப்புத்துார், கல்லுப்பட்டி, திருமங்கலம் வழியாக மதுரை வந்து , அதே நாளில் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது. இறுதியாக, ராமேஸ்வரம் சென்று ரதயாத்திரை முடிவடைகிறது.

இந்த ரதயாத்திரையை அனுமதித்தால் தமிழகத்தில்  சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அதற்கு அனுமதி வழங்கக் கூடாது என எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையில் வலியுறுத்தின. ஆனால் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ரத யாத்திரைக்கு தடை விதிக்க முடியாது என மறுப்புத் தெரிவித்தனர்.

இதையடுத்து சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த திமுகவினர், மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் அதிமுக  ஆட்சி நடக்கிறதா அல்லது பாஜக ஆட்சி நடக்கிறதா ? என கேள்வி எழுப்பினார். மத்தியில் ஆளும் பாஜக என்ன சொல்கிறதோ அதை அப்படியே நிறைவேற்றும் ஏஜெண்ட்டுகளாக தமிழக அரசு செயல்படுகிறது என கூறினார்.

இபிஎஸ்ம், ஓபிஎஸ்ம் மோடி அரசுக்கு அடிக்கும் ஜால்ரா சத்தம் காதைப் பிளக்கிறது எனவும் ஸ்டாலின்  கிண்டல் செய்தார்.