நீட் தேர்வால் ,  மருத்துவப்படிப்பு படிக்க முடியாமல் ஏமாற்றமடைந்த அரியலூர் மாணவி அனிதா மனமுடைந்து நேற்று தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் மரணத் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று மாநிலம் முழுவதும் மாணவர்களும், இளைஞர்களும் தன்னெழுச்சியாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலகினர் என ஆயிரக்கணக்கானோர் அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக மும்பை சென்றிருந்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து காலை வழியாக குழுமூர் வந்தார். தொடர்ந்து அனிதாவின் உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  நீட் தேர்வு பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் தமிழக மாணவர்களை ஏமாற்றி விட்டதாக குற்றம்சாட்டினார்.

நீட் தேர்வு பிரச்சனையில் நல்ல சேதி வரும்…நல்ல சேதி வரும் என மத்திய மாநில அரசுகள், தவறான தகவல்களை தந்து மாணவர்களை அலைக்கழித்தாக தெரிவித்தார்.

மாணவி அனிதாவின் மரணம், தற்கொலை என்பதைவிட கொலை என்றே கூறவேண்டும் என குற்றம்சாட்டிய ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் தங்களது பதவியை காப்பாற்றிககொள்ளவே  டெல்லி சென்று வந்துள்ளதாக கூறினார்.

தமிழக அமைச்சர்கள் தங்கள் பதவிகளை காப்பாற்றிக் கொள்ளவும், கொள்ளையடிப்பதை தொடரவும் தான் டெல்லி சென்று வந்தார்கள் என குறிப்பிட்டார்.

நீர் தேர்வில் இருந்து ஓராண்டிற்கு விலக்கு கிடைக்கும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்தார். ஆனால் அந்த உறுதியை காற்றில் பறக்கவிட்டதாக ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

அனிதாவின் மரணத்துக்கு காரணமான மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் விஜய பாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூண்டோடு பதவி விலக வேண்டும் என தெரிவித்தார்.

நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைத்திருந்தால் அனிதாவுக்கு மருத்து படிப்புக்கு இடம் கிடைத்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இப்பிரச்சனை குறித்து நாளை மறுநாள் எதிர்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, அடுத்த நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.