தமிழக அரசிற்கு வெட்கம்,மானம், ரோஷம் இருந்தால் குட்கா விவகாரத்தில் எங்களால் நடவடிக்கை எடுக்க இயலவில்லை என்று ராஜினாமா செய்திருக்க வேண்டுமென்று என்று அதிமுக-வை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து உள்ளார்.

சட்டசபையில் தடைசெய்யப்பட்ட குட்காவை கொண்டு வந்தது தொடர்பாக விளக்கமளிக்க சட்டசபை உரிமைக்குழு ஸ்டாலின் உட்பட 21 திமுக எம்.எல்.ஏகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக கோபாலபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், உரிமை மீறல் குழு அனுப்பியிருக்கும் நோட்டீசை சட்டப்படி சந்திக்க தயாராக உள்ளோம். 

சட்டசபையில் திமுக எம்.எல்.ஏகளின் பலத்தை குறைக்கவே மைனாராட்டி அதிமுக அரசு திட்டமிட்டு சதி செய்துள்ளது. 

ஆட்சியை காப்பாற்றிக்கொள்ளவே இந்த குதிரை பேர எடப்பாடி அரசு முயற்சி செய்கிறது. தற்போது கூட பொன்னேரியில் 10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

இது தமிழகத்தில் இன்னும் குட்கா விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பதை நிரூபித்து உள்ளது என்று அவர் கூறினார்.

தடை செய்யப்பட்ட, குட்கா வியாபாரத்தை இன்று வரை தமிழக அரசினால் தடுக்க இயலவில்லை என்றும்,அதை செய்ய முடியாத நிலையில் இந்த அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

குட்கா விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுத்திருந்தால் அதனை திமுக பாராட்டியிருக்கும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.