Asianet News TamilAsianet News Tamil

சிறப்பா செஞ்சிட்டிங்க... தமிழக அரசை ஆஹா ஓஹோன்னு பாராட்டும் திமுக தலைவர் ஸ்டாலின்!

“கஜா புயல் எச்சரிக்கை வெளியிடப்பட்டவுடன், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை வாரியம் மேற்கொண்ட முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை” என்று திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Stalin praise for the Tamil Nadu Government
Author
Chennai, First Published Nov 16, 2018, 1:11 PM IST

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று  வெளியிட்டுள்ள அறிக்கையில், “இயற்கைச் சீற்றத்தால் தமிழ்நாடு மீண்டும் ஒரு முறை பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. பல இடங்களில் புயல்காற்றில் மரங்களும் மின்கம்பங்களும் கூரைகளும் சரிந்து விழுந்து கிடக்கும் காட்சிகள் மனவேதனையைத் தருகின்றன. இப்பகுதிகளில் மின்தடையும் போக்குவரத்து முடக்கமும் தவிர்க்க முடியாதவையாகிவிட்டன. புயலின் பின் விளைவுகள் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுவது குறித்த செய்திகள் அதிர்ச்சி தருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

Stalin praise for the Tamil Nadu Government

இந்த நிலையினைச் சீர் செய்து சகஜநிலை திரும்பி மக்களின் வாழ்வாதாரத்திற்கான அடிப்படைகள் வழக்கம்போல் தொடர்ந்து நடந்திட, போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், “புயல் குறித்த வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை வெளியிடப்பட்டவுடன், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை வாரியம் (Tamilnadu Disaster Management board) முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்ட விதம் பாராட்டிற்குரியது. அதன் தொடர் நடவடிக்கைகளுக்கு ஆட்சியாளர்கள் ஒத்துழைப்பு தந்திட வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Stalin praise for the Tamil Nadu Government

“முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்போருக்கு இயல்பு நிலை திரும்பும் வரை உணவு, உடை, படுக்கை வசதி, மருத்துவ வசதி போன்றவை போதுமான அளவுக்கு குறையேதுமின்றிச் செய்து தரப்பட வேண்டும்.புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரி செய்வதில் புயல் வேகத்துடன் அரசு இயந்திரம் இயங்கிட வேண்டியது அவசியமாகும். தாமதமும் அலட்சியமும் காட்டினால், 2015 டிசம்பரில் சென்னையில் ஏற்பட்ட செயற்கை வெள்ள பாதிப்புகளைப் போல ஏராளமான இழப்புகள் ஏற்படும்” என்று சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின்,

Stalin praise for the Tamil Nadu Government

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு திமுகவினர் நேரில் சென்று, நிலைமையைக் கண்டறிந்து மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதி, போக்குவரத்து சீர்ப்படுத்துதல் போன்ற நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் உடுப்பணியாத ராணுவம் போல களமிறங்கி, அரசுத் தரப்பில் மேற்கொள்ளும் மீட்புப் பணிகளுடன் இணைந்து செயலாற்றுவீர் என்றும் கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios