stalin planning big on karunanidhi birthday

எந்த ஒரு நல்ல விஷயத்தை ஆரம்பிக்கும்போதும் ஸ்வீட் சாப்பிடுறது நம்ம வழக்கம், ஆனா எந்த ஒரு மெகா விஷயத்தை ஆரம்பிக்கிறப்பவும் விழா எடுக்குறதுதானே அரசியல்வாதிங்களோட பழக்கம்.

அந்த வகையில் கருணாநிதியின் வைரவிழா கொண்டாட்டத்தின் பின் உட்கட்சி நிர்வாகத்தில் ஏகப்பட்ட மாறுதல்களை, அதிரடி உத்தரவுகளை, அரசியல் எழுச்சி நடவடிக்கைகளை உசுப்பிவிட இருக்கிறார் ஸ்டாலின். சன்னமாக கசிந்திருக்கும் இந்த ராணுவ ரகசியம்தான் தி.மு.க.வின் தற்போதைய சூப் நியூஸ்!

ஜூன் 3_ம் தேதி மாலையில் கருணாநிதியை வீட்டில் விட்டுப்போட்டு ஒட்டுமொத்த தி.மு.க.வும் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மெகா கொண்டாட்டத்தில் ஐக்கியமாக போகிறது. ராகுல்காந்தி, நிதிஷ்குமார், லாலு, சீதாராம்யெச்சூரி என்று பா.ஜ.க.வுக்கு எதிர்நிலைப்பாடுடைய தலைவர்களும் இதில் ஐக்கியமாகிறார்கள். 

இந்த மெகா நிகழ்வை தேசிய அரசியலில் தி.மு.க.வுக்கான எழுச்சி தினமாக உருவாக்க நினைத்தார் ஸ்டாலின். ஆனால் அவர் நினைத்தது போல் பல மாநில முதல்வர்கள் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை.

இதனால் தேசம் முழுக்க கவனிக்கப்படும் மிகப்பெரும் அரசியல் நிகழ்வாக இது இருக்கப்போவதில்லை என்பது அவருக்கு புரிந்துவிட்டது. ’தேசிய அரசியலில் திருப்பு முனையை உருவாக்கும் விழாவாக இதை ஆக்கி தலைவருக்கு பெருமை சேர்ப்போம்.’ என்று என்னதான் ஸ்டாலின் நேற்று பேசியிருந்தாலும் யதார்த்தம் அவருக்கு நன்றாகவே தெரியும்.

இதனால் விழாவின் டார்கெட்களை மாற்றியமைத்துள்ளார். அவற்றில் ஒன்றாக உட்கட்சி சீரமைப்பையும் ஃபிக்ஸ் செய்துள்ளார். 

ஆம், இந்த வைர விழா நிகழ்வுகளுக்குப் பிறகு ஸ்டாலினின் நடவடிக்கைகளால் தி.மு.க.விற்குள் உட்கட்சி பரபரப்பு தீப்பிடிக்கும் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான மனிதர்கள். மிக முக்கியமாக தமிழ்நாடு முழுக்க கணிசமான மாவட்ட செயலாளர்கள் அடுத்தடுத்து மாற்றப்பட வாய்ப்பிருக்கிறதாம்.

கோவை மாவட்டம் நான்காக பிரிக்கப்பட்டு நான்கு மாவட்ட செயலாளர்கள் இருந்தும் கடந்த சட்டசபை தேர்தலில் அங்கிருக்கும் பத்து தொகுதிகளில் ஒன்றேயொன்றைதான் தி.மு.க. ஜெயிக்க முடிந்தது. அதுவும் அ.தி.மு.க.வின் உள்குத்துக்களால் கிடைத்த வெற்றியே. இப்படியாக மாவட்ட செயலாளர்கள் அளவில் பல பஞ்சாயத்துகள். 

ஜெயலலிதா இருக்கும் போது திரைமறைவில் தி.மு.க. மா.செ.க்களுடன் தொழில் மற்றும் நட்பு ரீதியில் கூட்டு வைத்துக் கொண்டு ஆட்டம் போட்டனர் கணிசமான அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள். ஆனால் இப்போது தடுக்க, தட்டிக் கேட்க ஆளில்லாத நிலையில் வெளிப்படையாகவே இரண்டு கட்சி நிர்வாகிகளும் கூடி கும்மியடிக்கின்றனராம்.

இந்த பிணைப்பால் நேரடியாக பாதிக்கப்படுவது தி.மு.க.வின் வளர்ச்சிதான் என்று ஸ்டாலின் வருந்துகிறார். ஆளுங்கட்சி முக்கியப்புள்ளிகளுடன் நட்புக்காதலில் கசிந்துருகும் தி.மு.க. நிர்வாகிகளின் பட்டியலும் ரெடி. இவர்களுக்கு முதலில் வார்னிங் கொடுக்கப்படும், மீறி தொடர்ந்தால் சிம்பிளாக கழட்டிவிடப்படுவார்கள் என்கிறார்கள். 

ச்சும்மா குத்தம் சொல்லி குத்தம் சொல்லி ஆண் நிர்வாகிகளை மட்டும் சுளுக்கெடுக்காமல், பதவியிலிருந்து கொண்டு கட்சி வளர்ச்சி நடவடிக்கையில் அக்கறையே காட்டாமலிருக்கும் பெண் நிர்வாகிகளுக்கும் வருகிறது மெமோ. மாநிலம் முழுக்கவே தி.மு.க.வின் பெண் நிர்வாகிகள் கடந்த சில ஆண்டுகளில் கன்னாபின்னாவென பொருளாதாரத்தில் வளர்ந்திருப்பதாக ஒரு தகவல். 

வாடகை வீடு சொந்தவீடாக மாறியது, ரெண்டு அறைகள் கொண்ட சொந்த வீடு ரெண்டு மூன்று மாடிகளாக மாறியது, புது பிஸ்னஸ், தோட்டம் என்று பல பேர் மளமளவென செட்டிலாகி இருக்கிறார்கள். இவர்களை பற்றிய லிஸ்டும் ரெடி. இவர்களுக்கு என்கொயரியும் ரெடி. 

தி.மு.க.வில் இருக்கும் நிர்வாகிகள் பலர் தங்களுக்குள் இருக்கும் சொந்த பகையை சமூக வலைதளங்களிலும் வெளிப்படுத்தி சண்டை போட்டுக் கொள்கின்றனர். இது கட்சியின் பெயரைத்தான் டேமேஜ் செய்கிறது. சமீபத்தில் கூட கவிஞர் சல்மாவும், எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனும் மோதிக்கொண்டதை அத்தனை கட்சி நெட்டிசன்களும் ரசித்து பொழுதைக் கழித்தனர். ஆக இதற்கும் வருகிறது ஆப்பு.

சோஷியல் மீடியாவை சாதாரண மக்களை போல உங்களின் தனிப்பட்ட விஷயங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளுங்கள், விருப்பமிருந்தால் அதன் மூலம் கட்சியை வளருங்கள். அதைவிட்டு கட்சியின் பெயரை கெடுக்கும் வகையில் வாய்க்கால் வரப்பு சண்டை போட்டால் மாஜியாக்கப்படுவீர்கள் என்று மடேர் உத்தரவு தாங்கிய சுற்றறிக்கையும் உள்ளுக்குள் சுழலப்போகிறது. 

இப்படி இன்னும் பல ஆக்‌ஷன் ரியாக்‌ஷன்கள் வைரவிழாவுக்குப் பிறகு தி.மு.க.வில் வெடித்துக் கிளம்பப்போகின்றனவாம். 
அது சரி, மாநிலம் முழுக்க இருக்கும் கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளை இப்படி ஸ்கேன் செய்து தளபதிக்கு கொடுத்தது யார்? இப்படி போட்டுக்கொடுக்கும் வேலை பார்க்கும் கட்சி நிர்வாகிகள் செய்யும் தவறுகளை யார் போட்டுக் கொடுப்பது? என்கிற சந்தேகம் வரலாம். 

அடபோங்க பாஸ், ஸ்டாலின் கார்ப்பரேட் அரசியல்வாதியாகி ஒரு வருடத்துக்கு மேலாகிறது. அதனால் இப்படி தன் கட்சி நிர்வாகிகளை ஸ்கேன் செய்ய அவர் பயன்படுத்தியிருப்பது மும்பையை சேர்ந்த அதே இரண்டு உளவு ஏஜென்ஸிகளைத்தான். இந்த டீம்தான் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பும் மாநில முழுக்க சர்வே எடுத்துக் கொடுத்தது.

மொத்தத்தில் அப்பாவின் பிறந்தநாள் விழாவுக்கு பிறகு உட்கட்சிக்குள் தூர்வாரல் பணிகளை ஸ்டாலின் தொடங்கப்போகிறார். பார்த்து தோண்டுங்க பாஸ் மண்புழுக்கள் வந்தா பரவாயில்லை, மலைப்பாம்புகள் வெளியில வந்து கட்சி பேரு கண்டமாகிட போவுது.