கருணாநிதியின் டெல்லி மனசாட்சியாக இருந்து தன்னையும், கட்சியையும் ஒரு சேர ஓஹோவென வளர்த்தெடுத்தவர் முரசொலி மாறன். இன்று தேசிய அளவில் தி.மு.க. உரமேறி நிற்பதற்கான விதை போட்டவர் மாறனே. கருணாநிதி மற்றும் அண்ட்கோவின் ஸ்டைலே அரசியலில் அடிமட்டம் வரையில் இறங்கி களமாடுவதுதான். ஆனால் மாறனோ அந்த காலத்திலேயே கார்ப்பரேட் அரசியல்வாதியாக விளங்கினார். கார் கண்ணாடியை இறக்காமல் வலம் வந்துதான் தன்னையும், தன் கட்சியையும் வளமாக்கினார். ஆனால் முரசொலி மாறனின் மறைவுக்குப் பின் கருணாநிதிக்கு அப்படியொரு டெல்லி லாபி அமையவில்லை. வேறு வழியின்றிதான் டி.அர்.பாலுவையெல்லாம் நம்பினார் அவர். பாலு, ஹைலெவல் தொடர்புகளை வளர்த்துக் கொண்டாரே தவிர, தன்னை ஒரு பிரம்மாண்ட அரசியல்  கட்சியின் பிரதிநிதியாக   வட இந்திய அரசியல் தலைவர்களின் மத்தியில் நிலை நிறுத்திட தவறிவிட்டார். 

இதனால் தன் மகள் கனிமொழியை  ராஜ்யசபா எம்.பி.யாக்கி டெல்லிக்கு அனுப்பினார் கருணாநிதி. ஆனால் கனியாலும் மாறனின் இடத்தை நிரப்ப முடியவில்லை. மாறாக 2ஜி விவகாரத்தில் அவரும், ராசா உள்ளிட்டோரும் சிறை சென்றது தேசிய அளவில் தி.மு.க.வுக்கு பெரும்  பின்னடைவை கொடுத்தது. என்னதான் அந்த வழக்கில் இருந்து விடுதலை பெற்றுவிட்டாலும் கூட இன்னமும் பழைய தோரணையை தி.மு.க.வால் நிலை நிறுத்தமுடியவில்லை. மேலும்  முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன் எம்.பி.யாக , மத்திய அமைச்சராகவெல்லாம் ஆக்கப்பட்டும் கூட அவரால் கட்சிக்கு பெரிய பயனில்லை என்பதே கருணாநிதியின் கவலையாக இருந்தது. மேலும் அழகிரி பற்றிய மாறன் குடும்பத்து தினசரி பத்திரிக்கையின் சர்வே கட்டுரை பஞ்சாயத்தினால் இரு குடும்பங்களும் பிரிந்து, பின் ஒன்று கூடின. ஆனாலும் அந்த பிரிவுக்குப் பின் முழுமையாக அவர்களின் மனம் ஒன்றிவிடவில்லை. 

இன்னமும் மாறன் பிரதர்ஸுக்கும், ஸ்டாலின், அழகிரி குடும்பங்கள் உள்ளிட்ட கருணாநிதியி ரத்தங்களுக்கு நடுவில் ஈகோ யுத்தம் இருக்கத்தான் செய்கிறது. கருணாநிதி மறைவுக்குப் பின்  தி.மு.க.வின் தலைவராகிவிட்ட ஸ்டாலின்,  மாநில அரசியலில் முழு கவனம் செலுத்தும் அதே வேளையில் மத்தியிலும் தி.மு.க.வை தனிச்சிறப்புடைய அதிகாரத்துடன் இருக்க வேண்டியிருக்கிறது. காரணம், அ.தி.மு.க.வின் லகான் ஆனது மத்திய அரசின் கையில் இருக்கிறது! எனும் விமர்சனத்தால்தான். டெல்லியில் தங்களுக்கு ஏற்ற வகையில் லாபி செய்தால்தான், தமிழகத்தின் அரசியல் சூழலை தங்களுக்கு ஏற்றவாறு டியூன் செய்து கொள்ள முடிகிறது தி.மு.க.வால். இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான அடிப்படை பணிகள் துவங்க இருக்கும் நிலையில், எப்படி கருணாநிதியின் டெல்லி மனசாட்சியாக முரசொலி மாறன் விளங்கினாரோ அதேபோல் தனக்கு மிக விசுவாசமான ஒரு மனசாட்சி டெல்லியில் வேண்டுமென்று நினைக்கிறார் ஸ்டாலின். அதற்கு அவர் முன் இருக்கும் ஒரே சாய்ஸ் தன் மகன் உதயநிதிதான். ஆம், உதய்யை தங்களின் டெல்லி பிரதிநிதியாக முன்னிறுத்தி, உருவாக்கி, உரமேற்றிட முடிவு செய்துவிட்டாராம் ஸ்டாலின். 

அதன் வெளிப்பாடுதான் சமீபத்தில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை சென்று, தாக்கப்பட்ட மற்றும் போராட்டக்கார மாணவர்களை சந்தித்து அவர் ஆறுதல் கூறிய விஷயம். அந்த இடத்தில் சுமார் மூன்று மணி நேரமாவது இருந்து மிக நிதானமாக, மாணவர்களிடம் பல விஷயங்களைக் கேட்டறிந்திருக்கிறார் உதய். உதயநிதியின் இந்த பயணம் தி.மு.க.வின் சென்னை முக்கிய புள்ளிகளால் பத்திரிக்கைகள் மற்றும் மீடியாவில் பெரிய அளவில் பிரமோட் செய்யப்பட்டது. டெல்லியிலும் உதய்க்கு பெரும் வரவேற்பு வைபரேஷன் கொடுக்கப்பட்டது. தேவைக்கு ஏற்ப டெல்லிக்கு ச்சும்மா பறந்து சென்றா மட்டும் போதாது, அங்கே தன் கட்சியின் சார்பாக அதிகாரப்பூர்வ நபராக மகன் அமர வேண்டும் என்று ஸ்டாலின் நினைக்கிறார். 

அதற்கு ஏதுவாக இன்னும் மூன்று மாதங்களில் தமிழகத்தை சேர்ந்த சில ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிகாலம் முடியும் விஷயம் அவருக்கு கை கொடுக்கிறது. இதில் மூன்று எம்.பி.க்கள் தி.மு.க.வால் நிரப்பப்படும். அதில் ஒருவராக உதயநிதியை இப்போதே முடிவு செய்துவிட்டார் ஸ்டாலின்! என்கிறார்கள். உதய் ராஜ்யசபா எம்.பி.யாகி அங்கே சென்ற பின், ஒட்டுமொத்தமாக டெல்லி தி.மு.கவானது அவரது கரங்களில் ஒப்படைக்கப்படுமாம். சீனியர் மோஸ்ட் பாலு முதல், ஜூனியர் மோஸ்ட் கலாநிதி வீராசாமி வரை அனைவரும் அவரது வழிகாட்டுதல் படியே அரசியல் செய்வர். உதய்யின் சொந்த அத்தை கனிமொழி எம்.பி.யும் இதில் அடங்குவார். 

ஸ்டாலினின் இந்த மூவ்வினை டெல்லி தி.மு.க. புள்ளிகள் விரும்பவில்லை. கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோரை டம்மியாக்கிடவே தலைவர் ஸ்டாலின் இப்படியொரு முடிவெடுக்கிறார் என்று புகைகிறார்கள். ஆனால், உதயநிதி தி.மு.க. இளைஞரணியின் மாநில செயலாளர் ஆனதிலிருந்து அவரை சின்னவர் என்று மரியாதையாக அழைக்க துவங்கிவிட்ட  தி.மு.க. இளைஞரணியினரோ சின்னவருக்கு எம்.பி. சீட் ரெடி என்று  குஷியாகிறார்கள். ஸ்டாலின் உறுதியாகவே தன் மகனை ராஜ்யசபா எம்.பி.ஆக்கிவிடுவாரா? முரசொலி மாறனின் இடத்தை உதயநிதி நிரப்புவாரா? என பார்ப்போம்! 


-விஷ்ணுப்ரியா