தமிழகத்தில் கொரோனா தொற்று சமூக பரவல் என்ற நிலைக்கு செல்லவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் தமிழ்நாடு குடிநீர் வாரியம் சார்பில் 166 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் மூன்றாம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சுரங்கப்பாதை திட்டத்துக்கு காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

அதன் பின், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆலோசனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- கொரோனா தடுப்பு பணியில் கோவை மாவட்டம் முன்னணியில் உள்ளது. மாநகராட்சி சார்பில் கோவையில் நாள்தோறும் 2000 பேருக்கு பரிசோதனை நடக்கிறது. இதுவரை கோவை மாவட்டத்தில் 36,905 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 292 பேருக்கு கொரோனா தொற்று  ஏற்பட்ட நிலையில் 112 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோவை மாவட்டத்தில் குடிமராமத்து பணி சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று சமூக பரவல் என்ற நிலைக்கு செல்லவில்லை. மேலும், அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி போன்ற நாடுகள் கூட திணறுகிறது. ஆனால், தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது. 

மேலும், பேசுகையில் கொரோனா பரவலை தடுக்க அரசுக்கு ஸ்டாலின் என்ன ஆலோசனைகளை கூறியிருக்கிறார்? என முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார். தான் அரசியல் இருப்பதை தெரிவிக்கவே நாள்தோறும் அறிக்கைகளை ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார். உண்மைக்கு புறம்பான பொய்யான செய்திகளை ஸ்டாலின் பரப்பி வருகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கை சரியாக இல்லை என ஸ்டாலின் பொய் குற்றச்சாட்டு கூறி வருகிறார். 

மருத்துவ நிபுணர் சொல்லும் வழிமுறையை பின்பற்ற வேண்டும் என கூறியதை விமர்சிக்கிறார் மு.க.ஸ்டாலின். மருத்துவ நிபுணர்குழு அறிவுரைகளை பின்பற்றியிருந்தால் ஒரு எம்எல்ஏவை இழந்திருக்க அவசியமில்லை. அதிகாரிகள் மூலம் நிவாரணப் பொருட்கள் திமுக வழங்கியிருந்தால் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது என முதல்வர் கூறியுள்ளார்.