திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஸ்டாலின் பேசிவருகிறார். 

திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் 11வது நாளாக இன்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி காலை 1.30 மணியளவில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கருணாநிதி. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதன் விளைவாக, ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு ஆகியவை சீரடைந்தது. சிகிச்சைக்கு பிறகு கருணாநிதியின் உடல்நிலை சீரடைந்தது. எனினும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பதற்காக மருத்துவமனையில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டிருந்தார் கருணாநிதி.

இந்நிலையில், நேற்று மாலை 6.30 மணியளவில் காவேரி மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், வயதுமூப்பின் காரணமாக முக்கிய உடல் உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளது எனவும் மருத்துவ உதவிகளுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து கருணாநிதி கண்காணிக்கப்படுவார் எனவும் அடுத்த 24 மணி நேரத்திற்கு அவரின் உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பதைப் பொறுத்தே கணிக்க முடியும் எனவும் காவேரி மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதையடுத்து தொண்டர்கள் காவேரி மருத்துவமனையில் குவிந்தனர். அதனால் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இன்று கருணாநிதியின் பல்ஸும் குறைந்துகொண்டிருக்கிறது. அவர் கவலைக்கிடமாக இருந்துவரும் நிலையில், இன்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமை கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

இந்த ஆலோசனையை தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்த புறப்பட்ட ஸ்டாலின், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமியின் இல்லத்தில் முதல்வரை சந்தித்து பேசிவருகிறார். ஸ்டாலினுடன் அழகிரி, கனிமொழி, முரசொலி செல்வம், ஐ.பெரியசாமி ஆகியோரும் சென்றுள்ளனர். கருணாநிதியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதால், ஏதேனும் விரும்பத்தகாத நிகழ்வு நடக்கும் பட்சத்தில், அறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதற்காகவே இந்த சந்திப்பு என தகவல்கள் தெரிவிக்கின்றனர். கருணாநிதி முதல்வராக இல்லையென்றாலும் கூட, ஏதேனும் விரும்பத்தகாத நிகழ்வு நடந்தால், அவருக்கு அண்ணா நினைவிடத்தில் இடம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதற்காக ஸ்டாலின், முதல்வரை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.