டெல்லி சென்றுள்ள தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியாவை அவரது இல்லத்தில் இன்று சந்தித்தார். தொடர்ந்து ராகுலையும் சந்தித்து ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். 

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக சட்டப் பேரவையில் நிகழ்ந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடைபெற்ற வன்முறை மற்றும் இதனைத் தொடர்ந்து எதிர்கட்சி உறுப்பினர்கள் இல்லாமலேயே நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது போன்றவை குறித்து குடியரசுத் தலைவரிட்ம் புகார் அளிக்க டெல்லி சென்றார்.

மாலை குடியரசுத் தலைவரை சந்தித்து புகார் அளித்தார். அதனைப் பெற்றுக் கொண்ட பிரணாப், உரிய நடிவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை ஸ்டாலின் இன்று நம்பர் 10 , ஜன்பத் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வீட்டுக்குச் சென்றார்.

அவரை சந்தித்த ஸ்டாலின் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.பின்னர் தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து விவாதித்தார். மேலும் சட்டப்பேரவையில் நடைபெற்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் குறித்தும் பேசினார்.

விரைவில் தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் பேசியதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து ஸ்டாலின் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியையும் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின் போது, தி.மு.க.,வின் மூத்த நிர்வாகிகளான துரைமுருகன், திருச்சி சிவா, காங்கிரஸ் கட்சியின் முகுல் வாஸ்னிக், மாநில காங்.,தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் உடன் இருந்தனர்.