முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது அவரை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின்  சந்திப்பது என்பது நடக்காத விசயம். ஆனால் ஓபிஎஸ் தற்போது மு.க.ஸ்டாலின் தன்னை சந்திக்க வந்தால் அவரை மறுப்பதில்லை.

இந்த வகையில் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்வது, மாரடைப்பால் மரணமடைவது போன்ற சோக நிகழ்வுகள் குறித்தும், அம் மாவட்டங்களின் நிலைமை குறித்தும் முதலைமைச்சருடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் அதற்கு ஓபிஎஸ் நேரம் ஒதுக்கித் தர வேண்டும் என்றும் எதிர்கட்சித் தலைவர் மு.க..ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருந்தார்,

அதன்படி இன்று மாலை 5 மணிக்கு ஸ்டாலினை சந்திக்க ஓபிஎஸ் நேரம் ஒதுக்கி தந்துள்ளார். இதனையடுத்து தலைமைச் செயலகம் வந்த ஸ்டாலின். முதலமைச்சரின் அறைக்குச் சென்று ஓபிஎஸ்சை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் மழை பொய்த்துப் போனதால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள  பிரச்சனைகள்  குறித்து பேசினர்.மேலும் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க மத்திய அரசை வலியுறத்த வேண்டும் என்றும் அதற்காக சட்டப் பேரவையை அவசரமாக கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர் பொன்முடி, முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஆளும் முதலமைச்சர், எதிர்கட்சித் தலைவர் அடிக்கடி சந்தித்து பிரச்சனைகள் குறித்து பேசுவது தமிழகத்தில் புதிதாக இருந்தாலும் இது வரவேற்கப்படவேண்டிய ஒன்றுதான்.