நடிகர் கமல் திரையுலகிற்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவை தொடர்ந்து சென்னையில் கடந்த வாரம் பிரமாண்ட விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகர் ரஜினி, எடப்பாடி முதலமைச்சரானது குறித்து விமர்சித்திருந்தார். மேலும் மக்கள் நலனுக்காக கமலுடன் இணைந்து செயல்படவும் தயார் என்று ரஜினி தெரிவித்திருந்தார். இதே கருத்தை கமலும் அப்படியே வழிமொழிந்திருந்தார். அதோடு மட்டும் அல்லாமல் அவசியம் என்றால் ரஜினியுடன் இணைவது தமிழக மக்களுக்காகவே என்றும் கமல் விளக்கியிருந்தார்.

இதன் பிறகு தமிழக அரசியலில் புதிய கூட்டணி என்று ஒரு பேச்சு அடிபட்டது. திமுக – அதிமுகவிற்கு மாற்றாக 2021ல் புதிய கூட்டணி உருவாகும் என்றும் அந்த கூட்டணிக்கு ரஜினி தலைமை ஏற்பார் என்றும் பேச்சுகள் எழுந்தன. ஊடகங்கள் அனைத்தும் ரஜினி – கமல் கூட்டணி குறித்து தான் விவாதங்கள் நடத்தின.  ரஜினி – கமல் இணைவது குறித்து அதிமுக தரப்பில் இருந்து மிகவும் காட்டமான பதிலடிகள் வந்தன. ரஜினி மற்றும் கமலை காலம் போன காலத்தில் என்கிற ரீதியில் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் கோவாவில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி 2021ம் ஆண்டு அரசியலில் தமிழக மக்கள் மிகப்பெரிய அதிசயத்தையும், அற்புதத்தையும் நிகழ்த்துவார்கள் என்று கூறியது இந்த விஷயத்தை மேலும் பரபரப்பாக்கியது. இதுநாள் வரை அமைதியாக இருந்த திமுக தரப்பும் ரஜினி பேச்சுக்கு பதிலடி கொடுக்க ஆரம்பித்தன. இந்த பரபரப்பான சூழலில் தமிழகத்தில் மறுபடியும் மூன்றாவது அணிக்கான பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்துள்ளது.

இப்படி மூன்றாவது அணி அமைவது எப்போதுமே திமுகவிற்கு எதிராகவே இருக்கும். கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – திமுக நேருக்கு நேராக மோதினாலும் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சகிள் இணைந்து 3வது அணியை அமைத்தன. இந்த அணி தமிழகத்தில் கணிசமான வாக்குகளை பெற்றன. பல்வேறு தொகுதிகளில் இந்த கூட்டணி வேட்பாளர்கள் லட்சக்கணக்கான வாக்குகுளை பெற்றனர். இதனால் 2014 நாடாளுமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது.

இதே போல் 2016 சட்டமன்ற தேர்தல் சமயத்தில் தேமுதிக தலைமையில் மக்கள் நலக்கூட்டணி உருவானது. பாமக தனித்து போட்டியிட்டது. திமுக – அதிமுக நேருக்கு நேர் மோதினாலும் பல்வேறு தொகுதிகளிலும் நடுநிலை வாக்காளர்கள் மக்கள் நலக்கூட்டணி மற்றும் பாமகவை நாடிச் சென்றனர். இதனால் பல்வேறு தொகுதிகளில் சொற்ப வாக்கு எண்ணிக்கையில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்தது.

அதாவது தமிழக அரசியலில் ஓரளவு பலமான கட்சிகள் இணைந்து மூன்றாவது அணி அமைத்தால் அது திமுகவிற்கு பாதகமாகவே முடிவுகளை கொடுத்துள்ளது. நடுநிலை வாக்காளர்கள், அரசுக்கு எதிரான மனநிலையில் உள்ளவர்கள் திமுகவை விரும்பாமல் மூன்றாவது அணிக்கு தங்கள் வாக்கை செலுத்திவிடுகிறார்கள். ஆனால் திமுக – அதிமுக மட்டுமே இரண்டு அணிகளாக மோதினால் அரசு மீதான அதிருப்தி திமுகவிற்கு சாதகமாகிவிடுகிறது. அந்த அடிப்படையில் தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்றது.

இது போன்ற சூழலில் 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் கடந்த 2016 தேர்தலை போல மூன்றாவதாக ஒரு பலமான அணி உருவாகிவிடக்கூடாது என்பதில் திமுக உறுதியாக உள்ளது. அதனால் தான் இப்படி ஒரு பேச்சு அடிபட்ட சூழலில் உடனடியாக ஓடிச் சென்று அப்பலோவில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட கமலை ஸ்டாலின் சந்தித்ததாக சொல்கிறார்கள். அப்போது வெளிப்படையாகவே 2021 சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கமலிடம் ஸ்டாலின் பேசியதாகவும் சொல்கிறார்கள்.