சட்டப்பேரவை விவகாரத்தில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக சபாநாயகர் தனபால் செயல்பட்டதாக ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளோம் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 வாக்குகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றிபெற்றது.

இதையடுத்து அவைக் காவலர்களால் திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். இதில் எதிர்க்கட்சித்தலைவரும் திமுக செயலதலைவருமான முக ஸ்டாலின் சட்டை கிழிக்கப்பட்டது.
திமுக உறுப்பினர்களை வெளியேற்றியதைக் கண்டித்து கிழிந்த சட்டையுடன் ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் புகார் தெரிவித்தார்.
மேலும் சட்டப்பேரவை நிகழ்வுகளை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், இன்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்திக்க முக ஸ்டாலின் நேரம் கேட்டிருந்தார்.
அதன்படி இன்று மாலை அவருக்கு நேரம் ஒதுக்கபட்டிருந்தது. பின்னர், இன்று காலை ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர்.
இதையடுத்து இன்று மாலை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து ஆலோசனை நடத்திய ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
ஆளுங்கட்சிக்கு ஆதரவாக சபாநாயகர் செயல்பட்டதாக ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளோம்.
பேரவையில் நடந்த சட்டவிரோத நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்து விட்டு புதிதாக ரகசிய நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.
சட்ட பேரவையில் அத்துமீறி வாக்கெடுப்பு நடத்தி எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுள்ளார். சட்டவிரோதமாக பதவியேற்ற பழனிசாமி 5 கோப்புகளில் கையெழுத்து இட்டது முறையற்றது.
ஜனாதிபதி எங்கள் கோரிக்கைகளை பரிசீலிப்பார் என நம்புகிறேன்.
ஆளுங்கட்சி உட்கட்சி விவகாரத்தில் திமுக தலையிடாது. தமிழகத்தில் விரைவில் திமுக ஆட்சி மலரும்.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், விசாரனை கமிஷன் வேண்டும் எனவும் ஓ.பி.எஸ்சும் தீபக்கும் கூறியிருப்பது வரவேற்க தக்கது. ஆனால் ஆரம்பத்தில் இருந்தே திமுக ஜெயலலிதா மரணம் குறித்த விவகாரத்தில் விசாரணை கமிஷன் வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
