Asianet News TamilAsianet News Tamil

அடிப்படை தெரியாமல் அறிக்கை விட்டு அரசியல் செய்கிறார்..! ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த ஓ.பி.எஸ்..!

கரோனா தொற்று நோய் தடுப்பில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு மக்களைக் பாதுகாத்துக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, அரசியல் ஆதாயம் தேடும் ஒரே நோக்கத்தில் தான் இம்மாதிரியான பழைய விஷயங்களைக் கிளறி அறிக்கைகளை எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

stalin is doing cheap politics, says ops
Author
Chennai, First Published Apr 24, 2020, 1:27 PM IST

15-வது நிதிக்குழு குறித்து அண்மையில் திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டார். அதற்கு பதிலளித்திருக்கும் துணை முதல்வர் பன்னீர் செல்வம், 15-வது நிதிக்குழு குறித்த அம்சங்களை பல முறை சட்டப்பேரவையில் விளக்கிய பிறகும் அடிப்படை விஷயங்கள் தெரியாமல் ஸ்டாலின் அறிக்கை விட்டு மலிவான அரசியல் செய்வதாக விமர்சித்துள்ளார் .இது தொடர்பாக துணை முதல்வர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ''தமிழக முதல்வர் , பிரதமரை புதுடெல்லியிலோ அல்லது சென்னையில் சந்திக்கும் போதெல்லாம் அளித்த கோரிக்கை மனுக்களிலும், பல கடிதங்கள் மூலமாகவும், 15-வது நிதிக்குழுவின் தலைவர் என்.கே. சிங் தலைமையில் சென்னைக்கு வந்த நிதிக்குழுவின் கூட்டத்திலும் தமிழ்நாட்டிற்கு சாதகமாக இருக்கக்கூடிய ‘1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தான்’ மாநிலங்களுக்கிடையேயான நிதிப்பகிர்வு செய்யப்பட வேண்டும் என்று ஆணித்தரமாக எடுத்துரைத்தார். இதை எல்லாம் மறைத்துவிட்டு, முதல்வர் எவ்வித அழுத்தமும் கொடுக்காமல் வெறும் கடிதம் எழுதிவிட்டு அமைதி காத்திருந்தார் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறுவதிலிருந்தே அவருடைய மலிவான அரசியல் வெட்டவெளிச்சமாகிறது. 

stalin is doing cheap politics, says ops

அதுமட்டுமல்லாமல், 2020-2021 ஆம் ஆண்டிற்கான மாநிலங்களுக்கிடையேயான நிதிப்பகிர்வின் வாயிலாக மத்திய வருவாயிலிருந்து தமிழ்நாட்டிற்கு ரூபாய் 32,849 கோடி 15-வது நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது தமிழக முதல்வர் மற்றும் தமிழக அரசின் முயற்சியின் காரணமாகத்தான். இது கூடத் தெரியாமல், ஏதோ 15-வது நிதிக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு வெறும் 1928.56 கோடி ரூபாய் தான் வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை விடுத்துள்ளார். தற்போது விடுவிக்கப்பட்டுள்ள இந்தத் தொகையான ரூ.1928.56 கோடி 2020-2021ஆம் ஆண்டிற்கான மத்திய அரசிடமிருந்து, மத்திய வரி வருவாயிலிருந்து தமிழ்நாட்டிற்கு வழங்கக்கூடிய மொத்த பங்குத்தொகையான ரூ.32,849 கோடியிலிருந்து முதல் தவணையாகும். 2020-2021 ஆம் ஆண்டிலேயே மீதமுள்ள தொகையை இன்னும் 13 தவணைகளில் பெறப்படும். 14-வது நிதிக்குழு தமிழ்நாட்டிற்கு பரிந்துரைத்த பகிர்ந்தளிக்கக் கூடிய நிதியானது 4.023 சதவீதத்திலிருந்து, 15-வது நிதிக்குழு 4.189 சதவீதமாக உயர்த்தி பரிந்துரை செய்தது. இந்த முயற்சியையும் அதனால் தமிழ்நாடு மக்களுக்கு ஏற்படும் நன்மையையும் மூடி மறைத்துவிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை விடுவது விந்தையாக உள்ளது.

மேலும், ஜம்மு காஷ்மீர் மாநில மறு சீரமைப்பு காரணமாக ஏற்பட்ட மாற்றங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, மத்திய வரிகளில் பகிர்ந்தளிக்கக்கூடிய நிதிப் பகிர்வில், மாநிலங்களின் பங்கினை 42 சதவீதத்திலிருந்து 41 சதவீதமாக 15-வது நிதிக்குழு குறைத்துப் பரிந்துரைத்துள்ளது. இது இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானதாகும்.

stalin is doing cheap politics, says ops

இந்த அடிப்படைத் தகவலைக்கூட அறியாமல் எதிர்க்கட்சித் தலைவர் மத்திய வரிகளிலிருந்து மாநில அரசுகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டிய நிதியினை 42 சதவீதத்திலிருந்து 41 சதவீதமாக 15-வது நிதிக்குழு அறிக்கையில் குறைக்கப்பட்டிருக்கிறது என்று அரசியல் நோக்கத்தோடு அறிக்கை விட்டிருக்கிறார். மேலும், அவருடைய அறிக்கையில் ‘நிதிப் பகிர்விற்குப் பிறகும் வருவாய் பற்றாக்குறை சந்திக்கும் 14 மாநிலங்களுக்கு பரிந்துரைத்த மானியத்தில் கூட தமிழ்நாட்டிற்கு வெறும் ரூ.4025 கோடி மட்டுமே பரிந்துரைக்கப்பட்டது’ என்று கூறியுள்ளார். ஆனால், உண்மை நிலை என்னவென்றால், தமிழ்நாட்டிற்கு இதுவரை வருவாய் பற்றாக்குறை இருந்தபோதிலும், இதற்கு முன்பிருந்த எந்த நிதிக்குழுவும் வருவாய் பற்றாக்குறை மானியத்தை பரிந்துரைத்தது இல்லை.

ஆனால், தற்சமயம் தமிழக முதல்வரின் தொடர் முயற்சியின் காரணமாகவும், தமிழக அரசினுடைய வற்புறுத்தலின் காரணமாகவும் முதன்முறையாக 2020-2021 ஆம் ஆண்டிற்கு ரூ.4,025 கோடி வருவாய் பற்றாக்குறை மானியம் பரிந்துரை செய்யப்பட்டு முதல் தவணை பெறப்பட்டுள்ளது. இதை அறியாமல் எதிர்க்கட்சித் தலைவர் தனது அறிக்கையில் தமிழ்நாடு அரசைக் குற்றம் சாட்டியுள்ளது மிகவும் வேடிக்கையாக உள்ளது, கண்டிக்கத்தக்கது.

stalin is doing cheap politics, says ops

மேலும், பொதுவாக உலக அளவில் பல நாடுகள், பல மாநில அரசுகள் ஆண்டுதோறும் கடன் பெறுவதும், பெறப்பட்ட கடனை அரசுப் பணிகளுக்குப் பயன்படுத்துவதும் நடைமுறைதான். ஆண்டுதோறும் கடன் பெறுவதில் நிகர கடன் அளவு உயர்ந்து வந்தாலும் பொருளாதார உற்பத்தி மதிப்பும் உயர்ந்து வருவதால், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் கடன் அளவின் விகிதாச்சாரமே, கடன் அளவை சரியாக குறிப்பிடும் அளவுகோலாகும். ஏனெனில், ஆண்டுதோறும் பொருளாதார உற்பத்தி மதிப்பு உயர்ந்துவரும் நிலையில், கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான அரசின் திறனும் அதிகரித்தவண்ணம் இருக்கும். எனவே தான், மத்திய நிதிக்குழு கடனைப் பொறுத்தவரை மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 25 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் என்று வழிமுறை வகுக்கப்பட்டுள்ளது. இந்த விகிதாச்சாரம் தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரை 2019-20 ஆம் ஆண்டில் 21.43 சதவீதமாகவும், 2020-2021 ஆம் ஆண்டில் வரவு செலவு திட்ட மதிப்பீடுகளின்படி 21.83 சதவீதமாகவும் இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

stalin is doing cheap politics, says ops

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் விவாதத்தின்போது நான் இவ்விவரத்தை தெளிவாக எடுத்துரைத்தபோதிலும், எதிர்க்கட்சித்தலைவர், 'அதிமுக ஆட்சியில் ரூ.4.56 லட்சம் கோடிக்கு மேல் தமிழ்நாடு கடனில் மூழ்கியுள்ள இந்த நிலையிலும், குறைவாக நிதி ஒதுக்கியதற்கு நியாயம் தேடவில்லை எனவும், மாநில உரிமைகளை விட்டுக் கொடுத்துள்ளனர்' என்று கூறியுள்ளது விந்தையாக உள்ளது.  முதன்முதலாக நிதிக்குழுவிடமிருந்து வருவாய் பற்றாக்குறை மானியம் பெற்றதும், சென்ற நிதிக்குழுவிலிருந்து தற்போதைய நிதிக்குழு பரிந்துரை பொறுத்தவரை மத்திய வரிகளிலிருந்து மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கக்கூடிய விகிதாச்சாரத்தை உயர்த்திப் பெற்றதும் தமிழக அரசு தான். இந்த விஷயத்திலும் சரி, காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்குச் சாதகமாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைத்ததிலும் சரி, அதிமுகவின் 50 நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொடர் விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி தான்.

உண்மை இவ்வாறு இருக்க, ‘தமிழ்நாடு நிதி உரிமையைப் பறி கொடுத்துவிட்டு நிற்கிறது’ என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறியிருப்பதும், தமிழக முதல்வர், தமிழ்நாடு மக்களின் நலன் கருதி செய்யும் பணிகள் மக்களைச் சென்று அடைகின்றது. அதனால் அதிமுக அரசுக்கு மக்களிடம் செல்வாக்கு அதிகரித்துக்கொண்டே போகின்றது என்ற உண்மையை ஜீரணிக்க முடியாமல், கொச்சைப்படுத்தும் விதமாக அறிக்கை விடுவது, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சமே தவிர, வேறு ஒன்றும் இல்லை.

stalin is doing cheap politics, says ops

கேரளாவில் நடந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை எனக் கூறும் எதிர்க்கட்சித் தலைவர், அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிற மாநிலங்களுக்கு கிடைத்த நிதிப்பகிர்வு என்ன என்பதை விளக்க வேண்டும். மேலும், பலமுறை முதல்வர், பாரதப் பிரதமரை நேரிலேயும், கடிதங்கள் மூலமாகவும் தமிழ்நாட்டின் உரிமைகளையும், கோரிக்கைகளையும் வலியுறுத்திய பின், இந்தக் கூட்டத்திற்குச் செல்ல வேண்டிய அவசியம் எழவில்லை. 15-வது நிதிக்குழு தன்னுடைய பரிந்துரைகளில், மக்கள்தொகை, பரப்பளவு, வருமான இடைவெளி போன்ற தமிழ்நாட்டிற்கு வலு சேர்க்காத காரணிகளுக்கு அதிக மதிப்பீடுகள் வழங்குவது காரணமாக, நமக்கு பாதிப்பு ஏற்படுகின்றது என்று வலியுறுத்தி, இதுகுறித்து 15-வது நிதிக்குழுவிற்கு ஒரு கோரிக்கை மனுவினை தமிழக அரசு தயார் செய்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்புகளை 15-வது நிதிக்குழுவிடம் சரியாக எடுத்துரைத்து தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை தமிழக அரசு தொடர்ந்து நிலை நிறுத்தும் என்பதை ஆணித்தரமாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

stalin is doing cheap politics, says ops

மேற்கண்ட விவரங்களை எல்லாம் ஆளுநர் உரையிலும் என்னுடைய நிதிநிலை அறிக்கையிலும் தெளிவாகக் கோடிட்டுக் காட்டப்பட்டு இருந்தது. மேலும், இவ்விரண்டு அறிக்கைகள் மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய ஐயப்பாடுகளை களையும் வகையில், என்னுடைய பதில் உரையிலும் அரசின் நிலைப்பாடு தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. கரோனா தொற்று நோய் தடுப்பில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு மக்களைக் பாதுகாத்துக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, அரசியல் ஆதாயம் தேடும் ஒரே நோக்கத்தில் தான் இம்மாதிரியான பழைய விஷயங்களைக் கிளறி அறிக்கைகளை எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்த நேரத்தில் அரசியல் லாபம் தேடாமல் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் எதிர்க்கட்சித்தலைவர் நடந்துகொள்ள வேண்டும்''.

இவ்வாறு ஓபிஎஸ் பதிலளித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios