stalin gave instructions to dmk supporters
பொதுமக்களுக்கு இடையூறாக செயல்படக் கூடாது என, திமுக தொண்டர்களுக்கு செயல்தலைவர் ஸ்டாலின் அறிவுரை கூறி உள்ளார்.
இது குறித்த அறிவிப்பை தலைமை கழகம் வெளியிட்டு உள்ளது. அதில்,
தலைமைக் கழக அறிவிப்பு
"திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களிலோ, அந்த இடங்களுக்குச் செல்லும் வழிகளிலோ பேனர்கள், கட்அவுட்கள், டிஜிட்டல் போர்டுகள் போன்ற விளம்பரங்கள் செய்து பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு செய்யக் கூடாது என்றும் ,எந்த வகையிலும் பொதுச்சொத்துகளுக்குச் சேதாரம் ஏற்படுத்தக் கூடாதென்றும் ,கழகச் செயல் தலைவர் அவர்கள் பொறுப்பேற்ற நேரத்திலேயே கழக நிர்வாகிகள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
அதைக் கழகத்தில் பல நிலைகளிலும் உள்ள நிர்வாகிகள் முறையாகக் கடைப்பிடித்து வந்தாலும், ஒரு சில நிர்வாகிகள் ஆர்வவேகத்தின் காரணமாக அந்த அறிவுரையைக் கடைப்பிடிப்பதில்லை என்பது , அண்மையில் கழகச் செயல் தலைவர் பங்கேற்ற அண்ணா நகர் பொதுக்கூட்டம் தொடர்பாக வெளிவந்த செய்திகள் வாயிலாகத் தெரிய வருகிறது.
இந்த செய்திகளைப் படித்தவுடன் கழகச் செயல்தலைவர், சம்பந்தப்பட்ட கழக நிர்வாகிகளை அழைத்து,பாதிக்கப்பட்ட நடை பாதைகளை உடனடியாகப் பழுது பார்த்து முன்பிருந்த நிலைக்குக் கொண்டுவந்து சரிசெய்ய வேண்டும் என உத்தரவிட்டு, அவர்களும் அப்பணிகளைச் செவ்வணே செய்து முடித்து உள்ளனர்.
ஆகவே கழகச் செயல் தலைவர் ஏற்கனவே விரும்பி வெளிப்படுத்தியவாறு,கழக நிகழ்ச்சிகளில் பேனர், கட் அவுட், டிஜிட்டல் போர்டுகள் போன்ற விளம்பரங்களை அளவின்றிச் செய்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்குமாறு கழக நிர்வாகிகள் அனைவரும் கேட்டுக் கொள்ளப் படுகின்றனர். கழக நிகழ்ச்சி குறித்து முக்கியமான ஓரிரு இடங்களில் விளம்பரம் செய்தாலே போதுமானது.இந்த அறிவுரைகள் மீறப்படாமல் பின்பற்றப் படுவதை கழக நிர்வாகிகள் அனைவரும் உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்ளப்படுகிறது".
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
