திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க திமுக தலைமை கேப்டன் பாணியிலான யுக்தியை பின்பற்றத் தொடங்கியுள்ளதாக கூறுகிறார்கள்.

கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. சுமார் 29 எம்எல்ஏ இடங்களில் தேமுதிக வெற்றி பெற்றது. ஆனால் தேர்தல் முடிந்த ஆறே மாதங்களில் ஜெயலலிதா – விஜயகாந்த் இடையே மோதல் வெடித்தது. சட்டப்பேரவையில் ஜெயலலிதாவிற்கு எதிராக நாக்கை மடக்கி விஜயகாந்த் பேச பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. இதனை அடுத்து விஜயகாந்தை பழிவாங்க அதிமுக காய் நகர்த்தியது. முக்கியமாக விஜயகாந்த் கட்சி எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் அதிமுக வளைக்க ஆரம்பித்தது.

எம்எல்ஏக்களாக இருந்த சுந்தர்ராஜன், அருண் பாண்டியன், பாண்டியராஜன் என வரிசையாக தேமுதிக எம்எல்ஏக்கள் அதிமுக வசம் சென்றனர். ஜெயலலிதாவை சந்தித்து தொகுதிப் பிரச்சனைகள் குறித்து பேசியதாக தேமுதிக எம்எல்ஏக்கள் விளக்கம் கொடுத்தனர். இது தேமுதிகவிற்கு தமிழக அரசியலில் அப்போது பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. தினமும் 2 எம்எல்ஏக்கள் என்கிற ரீதியில் தேமுதிகவை அப்போது அதிமுக தலைமை கலகலக்க வைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயகாந்த், எஞ்சியுள்ள எம்எல்ஏக்களை தக்க வைக்க அதிரடி நடவடிக்கைகளில் இறங்கினார்.

தேமுதிக எம்எல்ஏக்கள் அனைவரையும் கண்காணிக்க மாவட்டந்தோறும் கட்சி நிர்வாகிகளை நியமித்தார். எம்எல்ஏக்களுக்கு நெருக்கமானவர்களையே அவர்களை பற்றி கட்சி மேலிடத்திற்கு தகவல் தெரிவிக்கும் உளவாளிகள் ஆக்கியது தேமுதிக தலைமை. அதோடு மட்டும் அல்லாமல் எம்எல்ஏக்கள் சிலர் அதிமுக பக்கம் செல்ல உள்ளனர் என்கிற தகவல் வெளியானால் அதனை உறுதிப்படுத்த ஒரு சில யுக்திகளை தேமுதிக அப்போது கையாண்டது. அதாவது எந்த எம்எல்ஏ மீதாவது சந்தேகம் என்றால் உடனடியாக அந்த எம்எல்ஏ அதிமுக பக்கம் செல்ல உள்ளதாக தேமுதிக தலைமையே தகவலை கசியவிட்டது.

இந்த தகவல் ஊடகங்களில் வெளியானதும் அந்த எம்எல்ஏவின் நடவடிக்கைகளை வைத்து அவர்கள் விசுவாசம் உள்ளவர்களா? அல்லது உண்மையில் அதிமுக செல்கின்றனரா என்று கண்டுபிடித்தனர். இதே பாணியில் தான் தற்போது திமுக தலைமையும் தங்கள் எம்எல்ஏக்களை வேவு பார்ப்பதாக சொல்கிறார்கள். எம்எல்ஏக்களின் நடவடிக்கைகயை கண்காணிக்க மாவட்டந்தோறும் சில நிர்வாகிகளை மேலிடம் அணுகியுள்ளதாக சொல்கிறார்கள். அதோடு மட்டும் அல்லாமல் கட்சித் தலைமையுடன் டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் செய்யும் எம்எல்ஏக்களின் விசுவாசத்தை கேப்டன் பாணியில் சோதிப்பதாக கூறுகிறார்கள்.

திமுக எம்பி ஜெகத்ரட்சகன், எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் பாஜக தலைவர் நட்டாவை சந்திக்க உள்ளதாக கடந்த இரண்டு முன்று நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டன. இப்படி தகவல்களை பரப்பியவர்களில் பெரும்பாலானவர்கள் திமுக தலைமையுடன் தொடர்பில் இருக்கும் நபர்கள், பத்திரிகையாளர்கள். அந்த வகையில் திமுக தலைமையே தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் பாஜக பக்கம் செல்ல உள்ளதாக தகவல்களை கசியவிடுவதாக கூறுகிறார்கள். இதற்கு அவர்கள் ரியாக்ட் செய்வதை வைத்து அவர்களின் விசுவாசத்தை கேப்டன் பாணியில் ஸ்டாலின் சோதிப்பதாக பேச்சு அடிபடுகிறது.

இரண்டு மூன்று நாட்களாக அனிதா ராதாகிருஷ்ணன் பாஜகவிற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அவர் அப்படி எல்லாம் இல்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இதே போல் ஜெகத்ரட்சகன்  பெயரும் பாஜகவுடன் இணைத்து சமூக வலைதளங்களில் தகவல் வெளியிடப்பட்ட நிலையில் அவர் தொடர்ந்து அமைதியாக உள்ளார். எது எப்படியோ? தேர்தல்  நெருங்கும் சமயத்தில் திமுக தலைமைக்கு இது ஒரு தர்மசங்கடம் தான்.