பாஜகவுடன் ஸ்டாலின் நெருக்கம் காட்டுவதாக எழுந்த கருத்துகளுக்கு, திமுக பொதுக்குழு மேடையில் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். 

பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி, கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டிங், பிறகு கோ பேக் அமித் ஷா என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் என பாஜகவிற்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வந்தது திமுக. நீட் உள்ளிட்ட பல விவகாரங்களில் மத்திய பாஜக அரசையும் கொள்கை ரீதியாக பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வந்த ஸ்டாலின், சமீபமாக ஒரு மென்போக்கை கடைபிடிப்பதாக பரவலாக பேசப்பட்டது. 

அதற்கு காரணம், கருணாநிதியின் புகழஞ்சலி கூட்டத்தில் கலந்துகொள்ள பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது, வாஜ்பாயின் அஸ்திக்கு பாஜக தலைமை அலுவலகத்திற்கே சென்று ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியது, கருணாநிதியின் புகழஞ்சலி கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்பதாக கூறப்பட்டது ஆகிய சம்பவங்கள், பல்வேறு கேள்விகளுக்கும் விவாதங்களுக்கும் வழிவகுத்தன. தமிழக அரசியல் களத்தில் கூட்டணி மாற்றம் ஏற்படப்போகிறதா என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் கருணாநிதியின் புகழஞ்சலி கூட்டத்தில் அமித் ஷா கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுவிட்டது. 

இந்நிலையில், இன்று திமுக பொதுக்குழுவில் கட்சியின் தலைவராக ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். அதன்பிறகு அவர் பேசிய முதல் உரையிலேயே பாஜகவுடன் நெருக்கம் காட்டுவதாக பரவிய தகவலுக்கு பதிலடி கொடுத்துவிட்டார். 

அப்போது பேசிய ஸ்டாலின், பகுத்தறிவு, சுயமரியாதை, சமூக நீதி, சமத்துவம் எனும் நான்கு தூண்களால் எழுப்பப்பட்ட இயக்கம் திமுக. கல்வி, சுயமரியாதை எனும் முதுகெலும்பில்லாத மாநில அரசையும், சமத்துவத்தையும், சமூக நீதியையும், பகுத்தறிவு சிந்தனைகளையும் சிதைக்கக்கூடிய மத்திய அரசையும் பார்க்கும்போது நமக்கு வேதனை ஏற்படுகிறது. கல்வி, கலை, இலக்கியம், மதம்  ஆகியவற்றின் அடிப்படையை அதிகார பலத்தால், மதவெறியால் அழித்திட மத்திய அரசு முயற்சித்துக்கொண்டிருக்கிறது. மதவெறியால் மத்திய அரசு மக்களாட்சி மாண்பை குலைக்கும் செயல்களில் ஈடுபடுகிறது. இந்தியா முழுவதும் காவிச்சாயம் பூச முயலும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட திமுக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

மத்திய அரசையும் பாஜகவையும் கடுமையாக விமர்சித்து பேசி, பாஜகவுடன் நெருக்கம் காட்டுவதாக பரவிய தகவலுக்கு பதிலடி கொடுத்தார் ஸ்டாலின்.