திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து அவர் காவேரி மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கோபாலபுரம் இல்லத்தில் இருந்து கருணாநிதியை ஆம்புலன்சில் ஏற்றும்போது மு.க.ஸ்டாலின் கண்ணீர்விட்டு அழுதார். தொண்டர்கள் அனைவரும் கதறி அழுதனர். இந்த நிகழ்வு  அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க செய்தது.

இன்று மாலை வரை திமுக தலைவர் கருணாநிதியின்  உடல் நிலை தேறி வந்தது. அவரது உடல் நிலை நன்றாக இருப்பதாகவும், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று  செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்  கேட்டுக் கொண்டார்.

ஆனால் நள்ளிரவில் திடீரென கருணாநிதியின் உடல்நிலை மீண்டும் மோசமானது. இதையடுத்து க்ருணாநிதியின் தனிப்பட்ட மருத்துவர் கோபால், காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்டோர் அவசரமாக கோபாலபுரம் வந்தனர். உடனடியாக அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, துரைமுருகன், ஆ.ராசா உள்ளிட்டோர் அவசர அவசரமாக அங்கு வந்தனர்.  தொடர்ந்து  டாக்டர்கள் அறிவுரைப்படி கருணாநிதியை காவேரி மருத்துவமனையில் அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டது.

பின்னர் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. உடனடியாக கருணாநிதி ஆம்புலன்சில் ஏற்றப்பட்டார். அப்போது கருணாநிதியின் மகன் ஸ்டாலின் கண்ணீர்விட்டு அழுதார்.

உடன் இருந்த துரை முருகன், ஜெகத் ரட்சகன் ஆகியோரும் கண்கலங்கி நின்றனர். தமிழன் பிரசன்னா கதறி அழுதார். அது மட்டுமல்லாமல்  அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் தலைவா,, தலைவா.. எழுந்து வா… டாக்டர் கலைஞர் வாழ்க.. என கோஷமிட்டபடி கதறி அழுதனர்.

பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவர் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்க அங்கு தீவிர உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் ஸ்டாலின், கனிமொழி, ராசாத்தி அம்மாள் போன்றோர் சென்றுள்ளனர்.

கருணாநிதி அங்கு முழுமையான சிகிச்சை பெற்று மீண்டும் நல்ல முறையில் வீட்டுக்கு திரும்பி வர வேண்டும் என தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டு பேசி வருகின்றனர்.