காவிரி விவகாரத்தில் தமிழக கட்சிகள் ஓரணியில் திரண்டு போராடததன் காரணத்தை ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. எதிர்க்கட்சிகளின் சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், தமிழகமே வெறிச்சோடி காணப்படுகிறது. விவசாயிகள், மாணவர்கள், அரசியல் கட்சிகள் என பல தரப்பும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

திமுக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, மதிமுக, விசிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

சென்னையின் பிரதான சாலைகளான அண்ணா சாலை, மெரினா கடற்கரை சாலைகளில் மறியலில் ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சியினர் கலந்துகொண்டனர். இதில், ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால், ஸ்டாலினை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன் ஆகியோர் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், இதுவரை இல்லாத அளவிற்கு முழு அடைப்பு போராட்டம் 100% வெற்றி அடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 10 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

காவிரி விவகாரத்தில் ஆளும் அதிமுக தனது பங்கிற்கு தனித்து போராடி வருகிறது. எதிர்க்கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்தப்படுகிறது. அதிலும், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரளவில்லை. திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. நாம் தமிழர், பாமக உள்ளிட்ட கட்சிகள் திமுக தலைமையிலான போராட்டங்களில் பங்கெடுக்கவில்லை. தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்னைக்காக தமிழக கட்சிகள் ஓரணியில் திரண்டு போராடாமல் தனித்தனியாக போராடுகின்றனர்.

இதுதொடர்பாக ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, மத்திய அரசுக்கு அடிமையாக இருக்கிறது. அதிமுக அரசு அடிமையாக இருப்பது வரை தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போராடக்கூடிய சூழல் வராது என ஸ்டாலின் தெரிவித்தார்.