ஊழல் புகாரில் சிக்கிய முதலமைச்சர், அமைச்சர், காவல்துறை அதிகாரிகள் மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஆர்கே நகர் தொகுதியில், பணப்பட்டுவாடா செய்ததாக ரூ.89 கோடிய வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். அதையும், அமைச்சராக இருக்கும் விஜயபாஸ்கர் வீட்டிலேயே பறிமுதல் செய்தனர்.

இதற்கான பட்டியலை தயாரித்து, வருமான வரித்துறையினரும், தேர்தல் ஆணையமும் புகார் கொடுத்துள்ளது. ஆனால், இதுவரை எப்ஐஆர் போடவில்லை. அந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான்.

அதேபோல் புற்று நோய் உருவாக்கும் குட்கா பொருட்களை விற்பனை செய்ய அமைச்சர், கமிஷனர், டிஜிபி என அனைவரும் லஞ்சம் வாங்கியுள்ளார்கள். அதுபற்றி விசாரிக்க வருமான வரித்துறையினர், தலைமை செயலாளருக்கு அனுப்பிவிட்டனர். ஆனால், அதுபோன்ற எந்த புகார் மனுவும் இதுவரை வரவில்லை என தலைமை செயலாளரே பொய் சொல்கிறார்.

தலைமை செயலாளரே உடந்தையாக இருந்தால், நாட்டில் சட்டம், ஒழுங்கு எப்படி இருக்கும். எனவே இந்த பிரச்சனை குறித்து சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என திமுக சார்பில் வலியுறுத்தி வருகிறோம் என்றார்.