Stalin declared his political opponent openly

ரஜினியின் அரசியல் பிரவேசம் தி.மு.க.வுக்குள் பெரும் கலக்கத்தை ஏற்படுத்த துவங்கியுள்ளது தெரிகிறது, அவரை ஸ்டாலின் தனது அரசியல் எதிரியாகவே வெளிப்படையாக பிரகடனம் செய்துவிட்டார்...என ஷாக் வார்த்தைகளை எடுத்து வைக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

அவர்கள் விரிவாக பேசுவதாவது...

கடந்த 31-ம் தேதியன்று ‘நான் அரசியலுக்கு வருவேன். அடுத்த சட்டமன்ற தேர்தல் சமயத்தில் கட்சி துவங்கி, தனித்து போட்டியிடுவேன். அதுவரை போராட்டம், அரசியல் ஆர்பாட்டமெல்லாம் வேண்டாம். ’ என்று சொன்ன ரஜினியின் வாய்ஸிற்கு தேசமெங்கும் இருந்து ஏக வரவேற்புகள். அரசியலுக்கு வருவதை அறிவித்துவிட்டு சுமார் ஒரு வருடம் அப்படியே விட்டுவிடலாம் என்று தான் முதலில் நினைத்திருந்தார் ரஜினி. ஆனால் அவரின் குரலுக்கு ஏற்பட்ட அதிர்வலைகள் அவரை உறங்க விடவில்லை. இதனால்தான் மறுநாளே உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆப்! அறிவித்தவர் தொடர்ந்து மீடியாவை சந்தித்து அந்த ஹீட்டை அப்படியே தொடர வைத்தார்.

இதன் உச்சமாக நேற்று இரவில் திடீரென கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றார். கருணாநிதியை ரஜினி சந்தித்தபோது ஸ்டாலின் உடன் தான் இருந்தார். ரஜினியின் கவனம் முழுக்கவே கருணாநிதி மீது இருக்க, ஸ்டாலினோ ரஜினியை ஓரக்கண்ணில் அளவெடுத்துக் கொண்டிருந்தார்.

கருணாநிதியை சந்தித்துவிட்டு கிளம்பிய ரஜினி கோபாலபுர வாசலில் மீடியாவிடம் “கருணாநிதி என்னுடைய நீண்ட கால நண்பர். அவருக்கு புத்தாண்டு வாழ்த்து கூறினேன். பிறகு எனது அரசியல் பிரவேசத்தை பற்றி கூறி ஆசி பெற்றேன்.” என்றபடி நகர்ந்துவிட்டார்.

அவர் சென்றதும் மீடியாவை சந்தித்தார் ஸ்டாலின். ரஜினி, கருணாநிதியை சந்தித்தபோது ஒவ்வொரு நொடியும் கூடவே இருந்தார் ஸ்டாலின். ஆனால் பேட்டியின்போது ஏதோ அந்த சந்திப்புக்கும், தனக்கும் சம்பந்தமில்லாதது போல் பேசினார். அவரது வார்த்தையை நன்றாக கவனித்தால், ரஜினி மீது அவருக்கு இருக்கும் ஆதங்கம் வெளிப்படையாக புரியும். அதாவது...

“தலைவரை ரஜினி சந்திப்பது புதிதல்ல. அரசியல் நாகரிகம், பண்பாட்டின் அடிப்படையில் கருணாநிதி இன்முகத்தோடு அவரை சந்தித்து வாழ்த்தி இருக்கலாம். அதை தான் அவரும் சொல்லி விட்டு சென்றார் என்று நான் கருதுகிறேன்.

நடிகர் விஜயகாந்த் கட்சி துவங்கும் முன் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார்.

” என்று சந்திப்பு இடத்திலேயே இல்லாதவர் போல் பேசினார்.

அதோடு விட்டாரா?...

“தி.மு.க.வின் ஆதரவை கேட்டாரா, கேட்கவில்லையா, அதை ஏற்றுக் கொள்வதா, வேண்டாமா என்பது பற்றி தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்ய முடியும். அவர் ஆன்மிக அரசியலைத்தான் நடத்தபோகிறேன் என்று தெளிவாக சொல்லியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய திராவிட இயக்கத்தையே அழித்துவிடலாம் என்று ஒரு சிலர் திட்டமிட்டு, தங்களுடையை தூண்டுதலால் ரஜினிகாந்த் ஒரு கட்சி தொடங்க இருப்பதாக ஒரு சித்திரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்றை தெளிவாக சொல்லிக் கொள்கிறேன், இந்த மண் திராவிட மண். இந்த மண்ணின் திராவிட இயக்கத்தை அழித்துப் பார்க்க யார் யாரோ முயற்சி செய்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் தோற்ற கதைகள் நாட்டிற்கு நன்றாகவே தெரியும்.” என்று கூறியுள்ளார்.

ஆக தன் பேட்டியில் விஜயகாந்தும் இப்படித்தான் வந்து ஆசி வாங்கி கட்சி துவங்கி எங்களை எதிர்த்தார் ஆனால் இப்போது காணாமல் போய் கிடக்கிறார் அது போலவே ரஜினியும் ஆவார்! என்பதையும், ஆன்மிக அரசியல் நடத்தப்போகும் ரஜினி திராவிடத்தை அழிக்க முயன்று தோற்பார்! என்பதையும் சற்றே மறைபொருளாக குறிப்பிட்டிருப்பதன் மூலம் ரஜினி தனக்கு அரசியல் எதிரி என்பதை வெளிப்படையாகவே பிரகடனம் செய்துவிட்டார் ஸ்டாலின்.

ஸ்டாலினின் இந்த அதிரடிக்கு ரஜினியும் சுடச்சுட கவுண்டர் கொடுக்கவில்லை என்பதே யதார்த்தம். கோபாலபுரத்திலிருந்து போயஸ்கார்டன் செல்வதற்குள் ஸ்டாலினின் பேட்டியை நேரலையில் பார்த்த ரஜினி, போயஸில் நிருபர்களிடம் “நான் ஸ்டாலினை சந்திக்கவில்லை. கருணாநிதியை மட்டுமே சந்தித்து ஆசி பெற்றேன்.” என்று ஒரேடியாய் அடித்தார்.

ஸ்டாலின், ரஜினி இருவரும் ஒரு சேர கருணாநிதியுடன் நிற்கும் படங்கள் வெளியாகி இருக்க, நான் ஸ்டாலினை சந்திக்கவேயில்லை என்று ரஜினி சொன்னது ஸ்டாலினின் சீண்டலுக்கான பதிலடிதான்.

ஒரு வழியா பத்தவெச்சாச்சு!