“வெளியில போ!” அறிவாலயத்தில் நுழைய ஸ்டாலின் போட்ட தடை.. தடாலடி திமுக பாலிடிக்ஸ்..!
‘நான் பழைய சாஃப்ட் ஸ்டாலின் இல்ல. முத்துவேள் கருணாநிதியோட அரசியல் அதிரடி சாணக்கியத்தனங்கள் நிரம்புன புது ஸ்டாலின்.’
‘நான் பழைய சாஃப்ட் ஸ்டாலின் இல்ல. முத்துவேள் கருணாநிதியோட அரசியல் அதிரடி சாணக்கியத்தனங்களும் நிரம்புன புது ஸ்டாலின்.’ என்று தனது தொடர் வெற்றிகளின் மூலம் எதிர்க்கட்சியினருக்கு நிரூபித்துவிட்ட ஸ்டாலின், இப்போது தன் கட்சியினருக்கே அதை தடாலடியாக நிரூபிக்கிறார். அவரது விஸ்வரூபத்தால் மண்டை காய்ந்து கிடக்கிறார்கள் தி.மு.க.வினர்.
இன்னாச்சு பா?
அதாவது சமீபத்திய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றியை பெற்றது தி.மு.க. உள்ளாட்சியின் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் போன்ற இவற்றின் துணைத்தலைவர்கள் போன்ற பதவிகளில் சிலவற்றை கூட்டணி கட்சிகளுக்கும் தர்மப்படி ஒதுக்கினார் ஸ்டாலின். ஆனால் பல இடங்களில் தி.மு.க.வினர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. சண்டையிட்டு, அதிகாரத்தை பயன்படுத்தி, அதிகாரிகளைக் கைக்குள் போட்டு என்று பல ரூட்களை பயன்படுத்தி தங்களுக்குள் ஒருவரை தலைவராக்கினர்.
இதுமட்டுமல்லாது சில இடங்களில் பெட்டி வைக்கப்பட்டு தேர்தலே நடத்தப்பட்டது. அங்கெல்லாம் பரிதாபமாக தோற்றனர் தி.மு.க.வின் கூட்டணி கட்சியினர். இந்நிலையில் இப்படி அடாவடியாக பதவியை பெற்றவர்களை உடனடியாக ராஜினாமா செய்யச்சொல்லி உத்தரவிட்டார் முதல்வர். ஆனால் வெகு சிலரே அதை மதித்தனர், பலர் இன்னமும் பதவியிலே தொடர்கின்றனர்.
இந்த சூழலில் இவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்சி அறிவித்தும் கூட அவர்கள் திருந்துவதாக இல்லை.
இப்படி தடாலடியாக பதவியை பிடித்தவர்களில் ஒருவர்தான் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சியின் தலைவராக இருக்கின்ற மத்தீன். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் மத்தீன் தோற்கடித்தது தன் சொந்த கட்சி நபரை. இளைஞரணி நிர்வாகியான ஜெயக்குமார் என்பவரை சேர்மன் பதவிக்கு தலைமை அறிவித்திருந்தது. ஆனால் கழகத்தின் நகர செயலாளரான மத்தீன் தன் படையோடு எதிர்ப்புக் காட்டி, தேர்தல் நடக்க வைத்து, பதவியை வெற்றி கொண்டார்.
தோற்ற ஜெயக்குமார் தனது துயரத்தை தலைமைக்கு சொல்லியிருந்தார். இந்நிலையில், இன்று மத்தீன் தன் படை பரிவாரங்களுடன் சென்னையிலுள்ள தி.மு.க.வின் தலைமை கழகமான அறிவாலயத்துக்கு சென்றுள்ளார். அவர் அங்கு வந்திருப்பதை தலைமைக்கு சிலர் சொல்ல, உடனடியாக ஒலிபெருக்கியில் ‘மத்தீன் மற்றும் அவரை முன்மொழிந்தவர், வழி மொழிந்தவர் யாரும் உள்ளே வரக்கூடாது. நீங்க வந்திருக்கிறதா தலைமைக்கு உங்க மாவட்டத்து ஆளுங்களே சொல்லியிருக்காங்க. கூட்டணியை எதிர்த்து வென்றவங்க, தலைமை அறிவித்த நம் கழக நபர்களை எதிர்த்து வென்றவங்க யாரும் உள்ளே வரக்கூடாது’ என்று அறிவிக்கப்பட்டது.
இது பெரிய வைரலாகிய நிலையில் மத்தீன் ஒரு ஆடியோ வெளியிட்டார். அதில் “என்னை அறிவாலயத்தில் இருந்து வெளியேற்றியதாக ஒரு சில விஷம பிரசாரம் செய்கின்றனர். அது பொய். நான் தலைவர் மற்றும் உதயநிதி அவர்களின் அன்பு மற்றும் ஆசியோடு மக்கள் பணியை செய்வேன்” என்று சொல்லியுள்ளார்.
உடுமலையின் மத்தீன் மட்டுமல்ல தமிழகம் முழுக்கவே இப்படி தன் உத்தரவை எதிர்த்த யாரையும் விடப்போவதில்லை எனும் துடிப்பில் இருக்குதாம் தலைமை. ஆனால் அவர்களோ பத்து வருஷமா எதிர்க்கட்சியா பல்லைக் கடிச்சுட்டு கட்சியை வளர்த்தோம், பலப்பல லட்சங்கள் செலவு பண்ணினோம். இன்னைக்கு நம்ம ஆட்சி வந்தும் கூட எங்களுக்கு பதவிகள் தரலேன்னா எப்படிங்க? நாங்களும் எப்பதான் முன்னேறுவது? என்று நியாயம் கேட்டுள்ளனர். இதையும் தலைமை யோசிக்குதாம்.
ஆக இப்ப என்ன நடக்கப்போகுதுன்னு தி.மு.க.வுக்கே தெரியலைங்கிறதுதான் நிஜம்.