காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் விதித்த கெடு கடந்த 29ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. அதேநேரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வரும் 9ம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு தாக்கல் செய்த மனுவையும் சேர்த்து விசாரிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

இதற்கிடையே காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீர வேண்டும் என்பதில் தமிழக விவசாயிகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் உறுதியாக இருக்கின்றனர். அதற்கான அழுத்தத்தை மத்திய அரசுக்கு கொடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் வலுத்துள்ளன.

விவசாயிகள், அரசியல் கட்சியினர், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். திமுக சார்பில் தினமும் மறியல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அதிமுக சார்பில், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் தலைமையில் தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. கடையடைப்பு, ரயில் மறியல், சாலை மறியல் என தமிழகம் முழுவதுமே போராட்டக்களமாக காட்சியளிக்கிறது.

இந்நிலையில், இன்று சென்னையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான மா.சுப்பிரமணியனை சந்தித்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றக் கூட தமிழக ஆட்சியாளர்களுக்கு தைரியமில்லை. ஆட்சியை காப்பாற்றுவதற்காக மத்திய அரசிடம் மண்டியிட்டு அடிமையாக இருக்கிறார்கள். தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு முறையாக அழுத்தம் கொடுக்காததால் தான் நாங்கள் போராடுகிறோம். மத்திய அரசுக்கு முறையாக நெருக்கடி கொடுக்காமல், இன்று உண்ணாவிரதம் இருப்பதெல்லாம் கபட நாடகம் என ஸ்டாலின் விமர்சித்தார்.