stalin couldnt touch the record of karunanidhi

ஆடு எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பது பழமொழி. எந்த வசதியும் இல்லாத காலத்தில் ஆடாக இருந்த கருணாநிதி பதினாறு அடி பாய்ந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆனால், எல்லா வசதியும் இருக்கும் ஸ்டாலினால், எட்டு அங்குலம் கூட பாய முடியாமல் மண்ணை கவ்வுகிறார் என்பதே அண்மைக்கால நிகழ்வுகள் சொல்லும் உண்மை.

திமுக வளர்ந்து வரும் ஆரம்ப கால கட்டத்தில், அண்ணாவே வேண்டாம், நம்மால் முடியாது என்ற பணிகளை எல்லாம், முடித்துக்காட்டி சாதித்தவர் கருணாநிதி.

கருணாநிதியின் முயற்சியால்தான், சென்னை மாநகராட்சியை திமுக முதன் முதலில் கைப்பற்றியது என்பது திமுகவின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு புரியும்.

ஆனால், கருணாநிதியின் வயது முயற்சியால், தற்போது அவரால் செயல்பட முடியவில்லை. அதற்காகத்தான் திமுகவின் செயல் தலைவராக்கப் பட்டிருக்கிறார் ஸ்டாலின்.

அவர் செயல் தலைவர் ஆன பின்னர், அவர் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும், ஒன்று தோல்வியில் முடியும் அல்லது, அவருக்கே எதிராக திரும்பும் எனபதே உண்மை.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஊடே, இவர் அறிவித்த ரயில் மறியல் போராட்டம் பிசு பிசுத்து மக்களின் கவனத்திற்கே வராமல் போனது.

கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ க்கள் தங்கி இருந்தபோது, கட்சியின் படை பலத்தை பயன்படுத்தி, ஊர் மக்களுடன் இணைந்து போராட்டமோ, கலாட்டாவோ செய்திருந்தால் எடப்பாடி ஆட்சியே வந்திருக்காது.

அதை தொடர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அவரது சட்டை கிழிந்து வெளியே வந்த காட்சி, சமூக ஊடகங்களில் பனியன் விளம்பரமாகவே நகைப்புக்குள்ளானது.

வலுவான முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் இருந்தும், ஆறு எம்.எல்.ஏ க்களை இழுக்க முடியாமல் சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் ஸ்டாலினால் வெற்றிபெற முடியவில்லை.

ஸ்டாலின் திமுகவில் சாதித்தது என்று சொன்னால், நமக்கு நாமே என்ற பெயரில் மக்களை நேரடியாக சந்தித்தது, மதிமுக-தேமுதிக வை உடைத்ததை தவிர வேறு எதையும் சொல்வதற்கு இல்லை.

கருணாநிதி, கம்யூனிஸ்டை உடைத்து தமிழ் மாநில கம்யூனிஸ்ட் என்ற கட்சியை உருவாக்கினார். காங்கிரசை உடைத்து தமிழ் மாநில காங்கிரசை உருவாக்கினார்.

அவருடைய கட்சி உடைப்பும், அரசியல் சாதுரியமும் திமுகவுக்கு பலம் சேர்ப்பதாகவே இருக்கும். ஆனால் ஸ்டாலினின் கட்சி உடைப்பு, அவரை அரியணை எற விடாமல்தான் தடுத்திருக்கிறது.

ஆக, கருணாநிதி என்ற ஆடு பதினாறு அடி பாய்ந்து திமுகவை வளர்த்தது. எதிர் தரப்பை அழித்தது. ஆனால் குட்டியான ஸ்டாலினால் எட்டு அங்குலம் கூட பாய முடியவில்லை.

முன்போல, கருணாநிதி மட்டும் ஆக்டிவாக இருந்திருந்தால், எடப்பாடி ஆட்சி என்ற ஒன்றே இருந்திருக்காது, சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானமும் தோற்றிருக்காது என்கின்றனர் மூத்த திமுகவினர்.

இனியாவது ஸ்டாலின் ஆக்கபூர்வமாக செயல்பட்டு, எடுக்கும் முயற்சியில் வெற்றிபெற வேண்டும் என்பதுதான் திமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பு.