சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் திமுக கொண்டு வந்த திட்டத்தை, ஜெயலலிதாவின் கனவு திட்டம் என்று கூறுவதற்கு வெட்கமாக இல்லையா? என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து, ஸ்டாலின் கூறியபோது, மெட்ரோ ரயில் திட்டத்தை அதிமுக இரண்டு ஆண்டுகள் முடக்கி வைத்ததாக தெரிவித்தார்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வித்திட்டவர் ஜெயலலிதாதான் என்று முதல்வர் எடப்பாடி தெரிவித்துள்ளார். இதன்மூலம், கருணாநிதியின் கனவு திட்டத்தை அவர் மறைக்க முயற்சி செய்கிறார்

2007-ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில்தான், மெட்ரோ ரயில் திட்டத்திற்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மெட்ரோ ரயில் திட்டத்திற்காக ரூ 14 ஆயிரத்து 600 கோடி திட்டப்பணிகளை மேற்கொண்டதும் திமுக அரசே.

அதற்காக, நான் ஜப்பான் சென்று 59 சதவிகிதம் நிதியைப் பெற கையெழுத்திட்டு திரும்பினேன். மேலும், மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பல்வேறு பணிகள் திமுக ஆட்சியில் தான் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் தற்போது முதல்வர் எடப்பாடி, அதிமுக ஆட்சி தான் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்தது என சொல்வதற்கு கூச்சமாக இல்லையா?

அதேபோல், மெட்ரோ ரயில் சேவையில் ஜெயலலிதாவின் கனவு நனவாகி உள்ளதாக வெங்கய்யா நாயுடு பேசியதும் அதிர்ச்சியாக உள்ளது. உண்மைக்கு மாறான தகவலை மத்திய அமைச்சர் அரசு விழாவில் பேசியது தவறான செயலாகும்.

ஊழல் குற்றவாளியான ஜெயலலிதாவுக்கு, வெங்கய்யா புகழாரம் சூட்டியுள்ளது, ஊழல் விவகாரத்தில் பாஜகவின் உண்மை முகத்தை காட்டுகிறது.

பெற்று எடுக்காத பிள்ளைக்கு அதிமுக அரசு பெயர் வைக்க முயற்சி செய்யக்கூடாது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.