stalin condemns edappadi govenrment

தமிழக அரசு யார் கட்டுப்பாட்டில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதே தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி. கட்சியும் ஆட்சியும் எடப்பாடி கையிலேயே உள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டாலும், தற்போதைய நிகழ்வுகளை பார்க்கும் போது மத்திய அரசின் பிடிக்குள் தமிழகம் இருப்பது பட்டவர்த்தனமாகவே தெரிகிறது. 

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது, தமிழக சட்டசபைக்குள் சென்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ஆய்வு நடத்தியது, தலைமைச் செயலகத்திற்குள் புகுந்து வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டது, என பல காரணங்களை உதாரணமாகக் கூறலாம்.

இந்த வரிசையில் தற்போது லேட்டஸ்டாக இணைந்திருக்கிறது மத்திய அரசின் மூன்றாண்டு சாதனை தயாரிப்பு விவகாரம். இதனைக் கேள்விப்பட்டது தான் தாமதம் வகை தொகையாக கண்டனம் தெரிவித்திருக்கிறார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred



இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழகமெங்கும் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. தாய்மார்கள் மதுக்கடைகளை எதிர்த்து தன்னெழுச்சியாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த பிரச்சினைகள் பற்றியெல்லாம் தகவல் திரட்டி ஆளும் அதிமுக அரசுக்கு கொடுத்து மக்களின் குறைகளை தீர்க்க முடியாமல் கையறுந்த நிலையில் நிற்கும் அதிமுக அரசின் கீழ் உள்ள தமிழக மக்கள் செய்தி தொடர்புத்துறை மத்திய அரசின் திட்டங்கள் குறித்து “வெற்றிக் கதைகள்” தயாரித்து, அதை மாவட்ட ஆட்சித் தலைவர்களின் ஒப்புதல் பெற்று தனக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிகளுக்கு செய்தித்துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்து இருப்பது அத்துமீறிய செயல் மட்டுமல்ல- அதிகாரமற்ற செயலாக அமைந்திருக்கிறது."

"மாநில அரசின் திட்டங்களையும், அந்த அரசு செயல்படுத்தும் மக்கள் நலத் திட்டங்களையும் மக்களுக்கு விளம்பரம் செய்யவே மாநில செய்தி தொடர்புத் துறை உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்களை விளம்பரம் செய்ய தனியாக “பிரஸ் இன்பர்மேஷன் பீரோ” என்று ஒரு அமைப்பு தனியாக மத்திய அரசின் கீழ் இயங்கி வருகிறது.

இந்நிலையில் அதிமுக அரசின் கீழ் உள்ள செய்தி தொடர்பு துறை மத்திய பா.ஜ.க. அரசின் வெற்றிக்கதைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பது இந்த ஆட்சி எந்த அளவிற்கு மத்திய அரசின் பிடியில் சிக்கி மாநில உரிமைகளைப் பறிகொடுத்து விட்டு நிர்கதியாக நிற்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது."



"வருமான வரித்துறை ரெய்டுகளில் சிக்கியும், ஊழல் புகார்களில் மூழ்கியும் மூச்சு விட முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் அதிமுக முதலமைச்சரும், அமைச்சர்களும் மத்திய அரசின் “வெற்றிக் கதைகளை” தயாரித்தாவது தப்பித்துக் கொள்ளலாமா என்று செயல்படுவது மாநிலத்தில் இருப்பது அதிமுக ஆட்சியா? அல்லது பா.ஜ.க. ஆட்சியா என்பது புரியாத மர்மமாக இருக்கிறது.

அதிமுக விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்று கூறிக் கொண்டே தமிழகத்தை “கொல்லைப்புறமாக” பா.ஜ.க. ஆட்சி நடத்துகிறது என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.மத்திய அரசின் வெற்றிக்கதையை தயாரிக்க மாநில அரசு உத்திரவிடுவது மன்னிக்க முடியாத துரோகம்". இவ்வாறு ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.