நீட் விவகாரத்தில் மாணவர்களுக்கு துரோகம் இழைத்த முதல்வர், அதிமுக அமைச்சர்கள், எம்.பி.க்களும் மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிப்பது குறித்து தமிழக அரசு அவசர சட்டம் இயற்றினால் ஓராண்டுக்கு விலக்களிக்கப்படும் என்றும், நிரந்தர விலக்கு என்பது கிடையாது என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சுக்கு, தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

மேலும், நீட் தேர்வில் ஓராண்டுக்கு விலக்கு என்பது தமிழக அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் கூறியிருந்தார்.

தமிழகத்துக்கு நீட் ஓராண்டுகால விலக்கு குறித்து,  தமிழக அரசின் சட்ட முன் வடிவு, காலதாமதமின்றி நாளை காலை 10 மணியளவில் மத்திய அரசிடம் வழங்கப்படும் என்றார்.

இந்நிலையில் நீட் விவகாரத்தில் மாணவர்களுக்கு துரோகம் இழைத்த முதல்வர், அதிமுக அமைச்சர்கள், எம்.பி.க்களும் மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். அதிமுக அரசு நீட் விவகாரத்தில் கபட நாடகம் நடத்துவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.